search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்
    X
    நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்

    நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்

    முதலில் நமது வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும். இக்கட்டுரையில் நாம் செய்யும் எந்த தவறுகள்/விஷயங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
    கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற உடலில் உள்ள கொழுப்பு பொருளாகும். இது உண்ணும் உணவுகளை செரிக்கவும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி-யை உருவாக்கவும் உதவுகிறது. ஏற்கனவே நமது செல்களின் கொழுப்பு உள்ளது மற்றும் தேவைப்படும் போது உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேலும் இந்த கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் சீஸ் போன்ற சில உணவுகளிலும் காணப்படுகிறது. அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற வாஸ்குலர் நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.  அதோடு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும். ஆகவே கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது.

    அதற்கு முதலில் நமது வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும். இக்கட்டுரையில் நாம் செய்யும் எந்த தவறுகள்/விஷயங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் திருத்திக் கொண்டால், பல அபாயகரமான நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். 

    உடற்பயிற்சி உடலில் சேரும் LDL என்னும் கெட்ட கொழுப்பால் உடல் எடை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த வகை கொழுப்புக்கள் தான் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

    ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கல்லீரலுக்கு நகர்த்தி, வெளியேற்றும் அல்லது பித்தமாக மாற்றும். மேலும் உடற்பயிற்சியினால் கொழுப்பைப் பரப்பும் புரதத் துகள்களின் அளவை அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 30-45 நிமிட நடைப்பயிற்சி, ஜாக்கிங், பைக்கிங், யோகா, நடனம் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்க உதவும்.  எனவே இதுவரை உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இன்று முதல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

    அதிக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளான வறுத்த உணவுகள், பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், பேகான் மற்றும் ஹாட் டாக்ஸ், டெசர்ட்டுகளான குக்கீஸ், கேக்குகள், ஐஸ்க்ரீம், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கக் கூடியவை.

    மேலும் எந்த ஒரு உணவுப் பொருட்களை வாங்கும் முன்பும், அதன் பின்புறம் "ஹாட்ரோஜினேட்டட் ஆயில்" என்று குறிப்பிட்டிருந்தால், அதை வாங்காதீர்கள் மற்றும்  நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ஓட்ஸ், பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

     அதோடு, நல்ல கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீன், அவகேடோ மற்றும் வெஜிடேபிள் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை வாங்கி சமையலில் பயன்படுத்துங்கள்.

    மொத்தத்தில் மோசமான உணவுப் பழக்கமானது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதை மறவாதீர்கள். புகைப்பிடித்தல் பழக்கமானது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களை காயப்படுத்தி, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வற்றிற்கு வழிவகுக்கும்.

    அதோடு, புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி விடும்.

    ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், பொதுவாக எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. ஆகவே ஒவ்வொரு 4 வருடத்திற்கும் ஒரு முறை உடலை முழு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

    அப்படி சோதனை செய்வதால், உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், அது ஆரம்பத்திலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் மற்றும் சரியான மருந்துகளின் உதவியுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்காதீர்கள்.

    உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதற்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள். நீங்களாகவே மருந்துகளை மாற்றி எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது கொலஸ்ட்ரால் அளவில் இடையூறு ஏற்படுத்துவதோடு, ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதித்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் மருத்துவர் கொடுத்த மருந்துகளை மாற்றாமல் அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

    ஒரு வேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளுடன், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
    Next Story
    ×