என் மலர்

  ஆரோக்கியம்

  ஆண்களை வெறுக்கும் கொரோனா வைரஸ்
  X
  ஆண்களை வெறுக்கும் கொரோனா வைரஸ்

  ஆண்களை வெறுக்கும் கொரோனா வைரஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்களே கவனமாக இருங்கள். கொரோனா வைரஸ் பாதித்த பின்னர் சிகிச்சையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது.
  அது என்னவென்றே தெரியவில்லை. கொரோனா வைரசுக்கு ஆண்கள் உயிர்வாழவே பிடிப்பதில்லை. உண்மைதான்.

  கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவதில் ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. இரு பாலரையும் சமமாகத்தான் தாக்குகிறது.

  ஆனால் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதும், அதிக உயிரிழப்பை சந்திப்பதும் ஆண் இனம்தான் என்று ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.

  வயதான ஆண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது, அதிலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுடன், கொரோனாவும் அழையா விருந்தாளியாக வந்து தாக்குகிறபோது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற நேரிடுகிறது.

  அவர்களில் ஏற்படுகிற உயிர்ப்பலியும் அதிகமாகத்தான் இருக்கிறது.

  இந்த உண்மையை ஒரு ஆய்வுக்கு பின்னர் விஞ்ஞானிகளே போட்டு உடைத்திருக்கிறார்கள்.

  சீனாவின் பீஜிங் நகரில் உள்ள டாங்ரன் ஆஸ்பத்திரியை சேர்ந்த விஞ்ஞானி ஜின் குய் யாங் உள்ளிட்டவர்கள்தான் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

  இது தொடர்பாக ஜின் குய் யாங் சொல்வது என்ன?

  “கடந்த ஜனவரி மாதமே, கொரோனா வைரஸ் பாதிப்பில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது எங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. உண்மையிலேயே கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது பெண்களை விட ஆண்கள்தான் அதிகளவில் இறக்கிறார்களா? என்பதே அந்த கேள்வி.

  ஆனால் யாருமே கொரோனா வைரஸ் தாக்கி ஏற்படுகிற இறப்பில் பாலின வேறுபாடுகளை அளவிடவில்லை. எனவே நாங்கள் ஆராய தொடங்கினோம்.

  இதில் இன்னும் எங்களுக்கு புரியாத புதிராக இருப்பது, எதற்காக இந்த வைரசால் ஒரு சிலர் மட்டும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதுதான்.

  அதே நேரத்தில் எங்கள் ஆய்வில் நாங்கள் கண்டறிந்தது, வயதான ஆண்கள் அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இருந்து வருகிற ஆண்கள், கொரோனா வைரஸ் தாக்குகிறபோது கூடுதல் கவனம் வேண்டும் என்பதுதான்.

  நானும் எனது குழுவினரும் கொரோனா வைரஸ் தாக்கிய பல ஆண்களையும், பெண்களையும் ஆராய்ந்து வந்தோம். நாங்கள் சிகிச்சை அளித்த 43 நோயாளிகளையே கவனித்து வந்தோம். அது மட்டுமல்ல, ஏற்கனவே தயாராக இருந்த 1,056 கொரோனா நோயாளிகள் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்தோம்.

  கோவிட்-19-க்கு காரணமான கொரோனா வைரஸ், 2003-ம் ஆண்டு தோன்றிய சார்ஸ் வைரஸ் போன்றதுதான். இரண்டுமே ‘ஏசிஇ2’ என்ற புரதத்தைத்தான் கொண்டுள்ளன.

  524 சார்ஸ் நோயாளிகள் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்தோம்.

  கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கிய நோயாளிகளில், வயதானவர்கள் ஏற்கனவே பிரச்சினைகளை கொண்டிருந்தபோது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் இருந்தது. அவர்கள் மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கியோரில் ஆண், பெண் சம வயதினராக, சம எண்ணிக்கையில் இருந்தபோதும், ஆண்களுக்குதான் வைரஸ் தாக்கம் அதிகளவில் இருந்தது.

  மிகப்பெரிய கோவிட்-19 நோயாளிகளின் தரவுகளை ஆராய்ந்தோம். அதில் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள்தான். இதன் அர்த்தம், பெண்களை விட ஆண்களின் இறப்புவீதம் 2½ மடங்கு அதிகம்.

  வயதைப் பொருட்படுத்தாமல், மோசமான நோயின் தீவிர தன்மைக்கு ஆணாக இருப்பது ஆபத்துக் காரணியாக அமைந்துள்ளது.

  2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்கியோரின் தரவுகள், பெண்களை விட அதிகளவில் ஆண்களே இறந்திருப்பதை காட்டின.

  சார்ஸ் மற்றும் கொரோனாவின் கோவிட்-19 வைரஸ்களில் உள்ள ‘ஏசிஇ2’ புரதத்தின் அளவுகள், ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது. பெண்களிடம் குறைவாக இருக்கிறது.

  அது மட்டுமல்ல, இதய நோய், நீரிழிவு நோய்த்தாக்கம் கொண்ட நோயாளிகளிடமும் இந்த புரதம் அதிகளவில் இருக்கிறது.

  இருப்பினும்கூட, கொரோனா வைரஸ் தொற்று நோய் பெண்களை விட ஆண்களை அதிகளவில் எதனால் பாதிக்கிறது என்பதை கண்டறிய இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தற்போது நாங்கள் நடத்தி இருப்பது ஒரு சிறிய அளவிலானதுதான்.

  இதில் கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது தெளிவு. இது ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புதான். எனவேதான் கொரோனா வைரஸ் பாதித்த ஆண்கள், அதிலும் வயதான ஆண்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்கிறோம்”.

  இப்படி சொல்கிறார் விஞ்ஞானி ஜின் குய் யாங்.

  ஆண்களே கவனமாக இருங்கள். கொரோனா வைரஸ் பாதித்த பின்னர் சிகிச்சையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. உயிரிழக்கும் ஆபத்தும், பெண்களை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் உங்களை அழையாத விருந்தாளிகளாக தேடி வர வைத்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அதுதான் இப்போது நல்லது!
  Next Story
  ×