search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ஒல்லி’ உடலழகின் ரகசியம்
    X

    ‘ஒல்லி’ உடலழகின் ரகசியம்

    ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்ற ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    சிலர், ‘நான் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் என் எடை கூடவே கூடாது’ என்று பெருமையடித்துக் கொள்வார்கள், சிலரோ, ‘நான் எடையைக் கூட்டுவதற்காக கண்டபடி சாப்பிடுகிறேன், ஆனாலும் ஒல்லியாவே இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.

    இதற்கான ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    சிறந்த உணவுப்பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    ஒருவர் குண்டாக இருப்பதற்கான காரணங்களை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுரீதியிலான மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணத்தை எடுத்துரைக்கும் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதில்லை.

    இந்நிலையில், உடல் பருமன் குறியீட்டு எண் (பி.எம்.ஐ.) 18-ஐ விடக் குறைவான அளவுடைய, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்து 600 பேரிடம் இருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான இரண்டாயிரம் பேர் மற்றும் சராசரியான உடல் எடையைக் கொண்ட 10 ஆயிரம் பேருடன் அது ஒப்பிடப்பட்டது.

    இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.

    இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சடாப் பரூக்கி கூறுகையில், ‘எங்களின் ஆராய்ச்சியின் மூலம், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் மட்டும் காரணமில்லை என்பதும், அந்தக் குறிப்பிட்ட நபரின் உடலில் உள்ள மரபணுக்களில் உடல் பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணம் என்பதும் முதல்முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எடையை மையமாகக் கொண்டு ஒருவரை விமர்சிப்பது எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், அதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

    நமது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் நாம் நினைப்பதைவிட மிகவும் குறைவான அளவே நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது’ என்கிறார்.

    ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணியாக விளங்கும் குறிப்பிட்ட மரபணுக்களைக் கண்டறிவதே தங்களது அடுத்த இலக்கு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் எடைக் குறைப்புக்கான வழிகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஆய்வு குறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டாம் சாண்டர்ஸ், ‘இது மிகவும் முக்கியமான, சரியான முறையில் நடத்தப்பட்ட ஆய்வு. காரணம், அதிகமான உடல் பருமனைக் கொண்டிருப்பவரும், சராசரியை விடக் குறைந்த உடல் எடையைக் கொண்டிருப்பவரும், வேறுபட்ட மரபணுத் தொகுப்பு எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.

    அதற்காக, காலம் காலமாக உடல் எடையைக் கட்டுப்படுத்தக் கூறப்படும் வழிகளான உடற்பயிற்சியும், நல்ல உணவும் உதவாது என்று சொல்ல முடியாது. அது கைகொடுக்கவே செய்யும்.

    எது எப்படியோ, ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கும், குண்டாக இருப்பதற்கும் அவர் மட்டுமே காரணம் என்று இனி கூற முடியாது.
    Next Story
    ×