search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை...
    X

    பெற்றோர் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை...

    • வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.
    • வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும்.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றாகிவிட்ட இச்சூழலில், மிகவும் சவாலான ஒரு விஷயம் உண்டென்றால் அது டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பதுதான். தனிமைக்குடித்தனங்களால் ஏற்பட்டு விட்ட பெரியவர்களின் வெற்றிடம் பிள்ளைகளை அதிகம் தனிமைப்படுத்திவிடுகிறது.

    கவர்ந்திழுக்கும் டிஜிட்டல் உலகமோ பல வலைகளை விரித்து வைத்து, அவர்களை விழுங்க காத்திருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நம் டீன் ஏஜ் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எப்படி? பக்குவமாக கையாள்வது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.

    ''டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. வளரிளம் பருவம் என்பது இரண்டும்கெட்டான் பருவம். சிறுவயது வரை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வளரிளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அது அந்த வயதிற்கான உயிரியல் இயல்பு.

    இதன் காரணமாக அந்த வயதில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னிடம் இருக்கும் ஆடைகள் துவங்கி, தான் வைத்திருக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் கூட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

    தனக்கென்று ஒரு அறை இருக்க வேண்டும் தன்னுடைய அறையை இப்படி இப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் தன் நண்பர்கள் தன்னிடம் மரியாதையாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடிய வயது அது.

    உடல்ரீதியான உணர்வு ரீதியான குழப்பங்கள், அச்சங்கள், கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் அப்போது உச்சகட்டத்தில் இருக்கும்.

    அதுமட்டுமில்லாமல் அந்த வயதில் தான் அவர்கள் தன் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதிலும் அம்மாவிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.படிப்பு, வேலை மற்றும் எதிர்காலம் குறித்தும் அவர்களுக்கு பயமும் குழப்பமும் இருக்கும்.

    இதனால் டீன் ஏஜ் காலத்தில் படிப்பு என்பதே பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. நிறைய படிக்க, எழுத வேண்டி இருக்கிறது. அத்துடன் நிறைய வேலை பளு (ப்ராஜெக்ட்ஸ், அசைன்மென்ட்ஸ்), புத்தக சுமை என கூடுதல் தொல்லைகள் வேறு. டீன் ஏஜ் என்பது அவர்களின் வாழ்வை சரியாக கட்டமைப்பதற்கான காலகட்டம். எனவே, இந்த வயதில் சரியான வளர்ப்பு முறை என்பது அவசியம்.

    வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்கவும் வேண்டும். அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் சில சுதந்திரங்களை வழங்கவும் வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் டியூஷன் போன்ற வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்கள் எந்த நேரத்திற்கு எந்த வகுப்பிற்குச் செல்கிறார்கள். எத்தனை மணிக்கு அது முடியும் என்ற அடிப்படைத் தகவல்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு போய் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.

    எப்போது பார்த்தாலும் வெளியே உணவுகளை வாங்கித் தராமல் எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சுவையாக செய்து தர வேண்டும். அதை அவர்கள் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். ஜங் ஃபுட் எனப்படும் உணவு வகைகள் அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கும். பிராய்லர் கோழிக்கறியும் கொடுக்காதீர்கள்.

    பிள்ளைகள் நம்மிடம் அன்பான பார்வை, ஸ்கின் டச் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள். இதுவும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகை. அவர்களிள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் கண்களை பார்த்து புன்னகையுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது என கேட்கலாம். தலையை தடவிக்கொடுக்கலாம். தோள்களை தட்டிக் கொடுக்கலாம். அந்த அன்பு மிகுந்த நிமிடங்களுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். தங்கள் உணர்வுகளை உங்களிடம் கொட்டுவதற்காக அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

    முக்கியமாக எந்நேரமும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி என மூழ்க விடாமல், உறவினர்களுடன் பழக விட வேண்டும். நம் உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும. பக்கத்து அக்கத்து மனிதர்களுடன் பழக விட வேண்டும். அப்போது தான் இயல்பான குணங்கள் வளரும். மற்ற பிள்ளைகளுடன் விளையாட விட வேண்டும்.

    ஏதாவது விளையாட்டு வகுப்புகளில் சேர்த்து விடலாம். இதனால் அவர்களுக்கு உடல்நலம் குறித்த கவனம் வரும். மனம் வேறு சிந்தனைகளில் சிதறாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என விளையாட்டானது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.

    அதேபோல் விளையாட்டில் தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் ஏற்படும். வெற்றி, தோல்வி எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விளையாட்டினால் மனம் உற்சாகமடையும். இந்த வயதில் அடிக்கடி ஏற்படும் கோபம் குறையும். யதார்த்தமாக மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்வார்கள்.

    பள்ளிகளில் ஒழுக்கத்திற்கான வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் தற்போது நடத்தப் பெறுவதில்லை. அதனால் நாம்தான் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, இந்த சமூகம் பற்றிய பொறுப்பு கலந்த உணர்வு இருக்க வேண்டும். இந்த சமூகம் முழுக்க பல நூறு கண்கள் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    திட்டிக் கொண்டிராமல், புலம்பாமல் அன்பாக அரவணைத்து உங்கள் அக்கறையை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதிகமாக நாம் அவர்களை பழித்துக் கொண்டே வந்தோமானால் நம்மை பழி வாங்குவதாக நினைத்து அவர்களே அவர்களை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைப் பேசி பேசி சண்டையிடாதீர்கள்.

    எல்லோரிடமும் அவர்களை பற்றி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சதா நாம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு சில பிள்ளைகள் தங்கள் உடலில் பிளேடால் அறுத்துக் கொள்வது போன்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். சரியான அரவணைப்பு இல்லாதபோது வெளியுலகிலும் அதாவது பள்ளி, கல்லூரிகளிலும் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தற்கொலை போன்ற விபரீதமான முடிவெடுப்பார்கள்.

    பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களும் ஒரு உயிர். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. எனவே, அவர்களின் வார்த்தைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மதிப்புக் கொடுங்கள். அது மிகவும் அவசியம்.

    ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கோபப்படுகிறார்கள்? வாதிடுகிறார்கள் என அவர்களின் பிரச்னைகளை உற்றுக் கவனித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் நிறைய பணத்தை அவர்கள் கைகளில் புழங்க விடாதீர்கள்.

    நாம் வீட்டில் இல்லாமல், அவர்களை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போகிறோம் என்ற குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவது கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவது எல்லாம் வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் வேலைக்குப் போகிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

    அவர்களின் நண்பர்கள், தோழிகள் யார்? யார்? என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களின் பின்புலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தீய சகவாசம் அவர்களை எந்த தீய எல்லைக்கும் கொண்டு விட்டுவிடும். சில வீடுகளில் அதிகப் பாசம் காட்டுகிறேன் என்று அதிகமாக பொத்தி பொத்தி வைப்பார்கள். நாய்க்குட்டியை எந்நேரமும் தடவிக் கொடுப்பது போல செய்வார்கள். அதுவும் தவறு. அது அவர்களை சோம்பேறியாக்கலாம். கோழைகளாக்கலாம். அதனால் அவர்களையும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.

    வீடு என்பது நிம்மதியான விஷயம். எங்கு சென்றாலும் என் அப்பா அம்மாவை நோக்கி, வீடு நோக்கி நேரத்திற்கு நான் சென்று விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வீட்டை உற்சாகமாக வைத்திருங்கள். குழந்தைகளை வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியே அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் முன் பெற்றவர்கள் சண்டையிடாதீர்கள். கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளின் முன் கடுமையான வார்த்தைகள், விவாதங்கள் வேண்டாம். அதேபோல் அந்தரங்கமும் அப்படித்தான்.

    எல்லாவற்றிற்கும் மேல் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கண்காணிப்பது வேறு. நம்பிக்கை இன்மை வேறு. அவர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். அதே சமயம் அவர்களை கவனித்துக் கொண்டும் இருங்கள். விட்டுப்

    பிடியுங்கள். பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாவது அழகான ரகசியமான ஒரு செயல்.

    அது போல் பல பல மாற்றங்கள் அவர்கள் மனதிலும் உடலிலும் ஏற்படும் இந்த காலகட்டம் மிக அழகானது. ஆச்சரியமானது. அவர்களை நாம் இந்த சமயத்தில் அழகாக அனுசரனையாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அவர்கள் நம் பிள்ளைகள் தானே. அவர்களை நாம் நேசிக்காமல் வேறு யார் நேசிப்பார்கள்.

    பெற்றவர்களாகிய நாம் அவர்களின் சின்ன சின்ன தவறுகளை நாம் பொறுத்துக் கொள்ளா விட்டால் யார் பொறுப்பார்கள். அந்த தவறுகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் பொறுப்புதானே. நாமும் இந்த வயதைக் கடந்து வந்திருப்போம். நாமும் சில தவறுகளை புரிந்திருப்போம் அதனை உணர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள்!''

    Next Story
    ×