என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஜங்க் புட்
    X

    குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஜங்க் புட்

    • இன்றைய காலத்தில் குழந்தைகள் ‘ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள்.
    • இந்த உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம்.

    'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற தாரக மந்திரத்தின்படி தரமான ஊட்டச்சத்துகள் நிறைந்த பலவிதமான உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ரசித்து, ருசித்து உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருந்து உள்ளது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், 'குப்பை உணவு' என்ற பொருள் கொண்ட 'ஜங்க் புட்'டை தற்போது, நாம் 'நவீன மாடர்ன் உணவு' என்று பெயரிட்டு சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் பழக்கிக்கொண்டிருக்கிறோம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே 'ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள் என்பதே உண்மை.

    ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் எல்லாமே இந்த வகையை சார்ந்தவையாகும். இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து மருத்துவர், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் இல்லத்தரசிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.

    உடல், மனவளர்ச்சி தடைபடும்

    ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி:-

    நாவிற்கு சுவையாகவும், எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் துரித உணவுகள் குழந்தைகளிடையே குறிப்பாக பள்ளி சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக அமைகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேடிச்சென்று விரும்பி உண்பது அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம். இந்த உணவுகளின் சுவை, நிறம், திடம் ஏற்றக்கூடிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாலும் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிக அளவில் இருப்பதாலும் உடல் நலக்கேடு உருவாகிறது. இதனை அடிக்கடி விரும்பி உண்ணும் குழந்தைகள் உடல் பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். இதுவே பிற்காலத்தல் இவர்களுக்கு தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (ஸ்ட்ரோக்) மற்றும் சீறுநீரக செயல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு முதல் மூலக்காரணியாக அமைகிறது.

    மேலைநாடுகளில் நடந்த ஆய்வுகளில் துரித உணவு அதிகம் உண்ணும் சிறுவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதைத்தவிர நினைவாற்றல் குறைதல், உடல் பருமன், மனச்சோர்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. துரித உணவுகள் சுவையாக இருப்பதால் குழந்தைகள் அதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகிறது. உடல், மனவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இவ்வகை உணவுகளில் இல்லாமல் இருப்பதால், உடலும், மனவளர்ச்சியும் தடைபெறுவது ஒரு பெரிய சவாலாக அமைகிறது. எனவே துரித உணவுகளை குழந்தைகள் உண்ணாமல் தடுப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமையாகும்.

    அலர்ஜியும், அஜிரணமும்

    நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்:-

    'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்க்கர் போன்ற உணவு வகைகளில் மைதா, அஜினோ மோட்டோ போன்ற பொருட்கள் அதிகம் சேர்ப்பதால், இந்த மாதிரியான உணவு வகைகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை கொடுத்து வந்தால் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகி விடுவதுடன், வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக குழந்தைகளுக்கு அஜிரணம் ஏற்படுவதுடன், அலர்ஜியும் ஏற்படலாம். குழந்தைகளை படிக்க வைக்கவும், சாப்பிடவும், தூங்குவதற்கும் ஜங்க் புட் உணவு வகைகளை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறுவதையும் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி நோய், நொடி இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கெடுதல் என்று கூற முடியாது

    புரசைவாக்கத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் அப்துல் ஹமீது:-

    பேக்கரியில் தினசரி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொருத்துதான் தினசரி தயாரிக்கப்படுகிறது. எனவே அன்றாடம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. எனவே இதனை வாங்கி உட்கொள்பவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இதனை வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்று 2 நாட்களுக்கு பிறகு சாப்பிடுவதால் தான் கெடுதல் ஏற்படுகிறது. உடல்நலம் குன்றியவர்கள் கூட பேக்கரி பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பேக்கரி மற்றும் துரித உணவுகள் கெடுதல் என்று கூறிவிட முடியாது.

    ஆரோக்கியத்திற்கு நல்லது

    பெரியமேட்டைச் சேர்ந்த வியாபாரி காந்திலால் பண்டாரி:-

    ஜங் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன், கல்லீரல், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், மன அழுத்தம், தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. அதனால் தான் இது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மெதுவாக கொல்லும் கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றில் உள்ளது. உலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்றாக ஜங் புட் இருப்பதால், அதிக சர்க்கரை கொண்ட தானியங்கள், சர்க்கரை பானங்கள், பதிவு செய்யப்பட்ட சூப்கள், சோடாக்கள், உறைந்த பிரஞ்சு பொரியல், ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் சாண்ட்வீச்சுகள் போன்றவை இந்த வகைக்குள் அடங்கும். இதனை சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    இயற்கை தந்த உணவுகள்

    ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெனீபர்:-

    இயற்கை தந்த உணவுப்பொருள்கள் அனைத்திலும் ஒருவித சுவை உண்டு. குறிப்பாக ஆப்பிள் பழமாகட்டும், பாகற்காய் பொரியலாகட்டும், எலுமிச்சை சாறாகட்டும் எல்லாவற்றையும் நினைக்கும் போதே அதன் சுவையை உணர்த்தும் வகையில் நம் மனதில் நிறைந்திருக்கும். இவை இயற்கை தந்த பொருட்கள். ஆனால், ஜங் புட் உணவுகள் எதிலும் அப்படியொரு இயற்கையான சுவையை எதிர்பார்க்க முடியாது. இந்த சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை. இந்தவகை உணவுகள் குழந்தைகளை மீண்டும், மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பண்டங்கள் குறித்து மருத்துவர்கள் கூறுவதை கேட்டால் பயமாக இருக்கிறது. எனவே இப்போது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம் எடுத்துக்கூறி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இருந்தாலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மீது அலாதி பிரியமாக இருந்து வருகிறது.

    எந்த உணவில் ஊட்டச்சத்து உள்ளது?

    கல்லூரி மாணவி பானுப்பிரியா:-

    ஊட்டச்சத்து இல்லாத பீட்சா மற்றும் பர்கர் சாப்பிட வேண்டாம், பொதுவாக வெளியில் எதையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். தற்போது சாப்பிடும் எந்த உணவு தரமாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கிறது?. ஆரோக்கியம் குறைவதற்கு வெறும் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் இல்லை. இருந்தாலும் பெரியவர்கள் சொல்படி, எண்ணெய் உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து வருகிறோம். வீட்டில் சமைக்கப்படும் கீரைகள் மற்றும் தானிய உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். ஆரோக்கியமாக இருப்பதாக உணருகிறோம். அனைவரும் கடைபிடிக்கவும் வேண்டுகோளும் விடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×