என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளும் போது உணர்ச்சி வசப்படாதீங்க....
    X

    முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளும் போது உணர்ச்சி வசப்படாதீங்க....

    • குழந்தைகளை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    • நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும்.

    டீன் ஏஜ் பருவத்தை துவங்கும் முன்பு உங்கள் குழந்தைகள் சில நேரங்களில் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. உங்களுடைய செல்லமான, இனிமையான, பாசமான குழந்தைகள் திடீரென்று பிடிவாதம் பிடிக்கும், மரியாதை இல்லாமல், அடிக்கடி முரட்டுத்தனமான கோபத்துடன் நடந்து கொள்ள தொடங்குவதைப் பார்க்கும் எல்லா பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும்.

    உங்களுடைய முயற்சிகளும், சமாதான பேச்சுகளும் திட்டுகளும் ஒன்றுமே பலனளிக்காமல் போகிறது என்பதை அறிந்து கொள்ளும்போது இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகள் டீன் ஏஜுக்கு வரும்போதுதான் இப்படி சிடுசிடுவென மாறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆனால், அது முழு உண்மை அல்ல, குழந்தைகளுக்கு, முரட்டுத்தனமும் எதிர்த்து பேசும் குணமும் கொஞ்சம் முன்னதாகவே தொடங்கி விடுகிறது என்பதுதான் நிதர்சனம். திடீரென்று தொடங்கும் மோசமான நடத்தை தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கையாளலாம், இதோ உங்களுக்கான சில உத்திகள்.

    ஒரு கெட்ட நடத்தையைக் கையாளும்போது, அதனால் உங்களுக்கு மிகவும் அதிகபட்ச கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அந்தக் கோபத்தை குழந்தைகள் மேல் காட்டினால், அது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடும், இன்னும் கூடுதல் கோபத்திற்கும் வெறுப்புக்கும் காரணமாகி விடும். அதற்கு பதிலாக, இதை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    முதலில், இது வளர்தலில் மிகவும் முக்கியமான ஒரு கட்டம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் குழந்தை இனிமேல் குழந்தையாக இருக்கப் போவதில்லை. இந்த நேரத்தில், உங்கள் குழந்தை உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். கூடவே பள்ளியில் தரப்படும் அழுத்தங்களும்; சக தோழர்களுடன் நட்பைத் தொடர்வதில் ஏற்படும் சிரமங்களும் சேர்ந்து கொள்ளும். உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.

    சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.

    Next Story
    ×