search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி தரும் செல்லம்...
    X
    குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி தரும் செல்லம்...

    குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி தரும் செல்லம்... எதிர்க்கும் பெற்றோர்...

    தாத்தா பாட்டியின் நிழலில் வளர்வது குழந்தைகளுக்கு எப்போதும் நன்மையே என்றாலும், குழந்தையின் பெற்றோர் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறையை ஏற்றுக் கொள்வதில்லை.
    குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டியின் உதவி எந்த அளவுக்கு தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு குழந்தைகள் வளர வளர தாத்தா பாட்டியின் செல்லத்தால் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே பெரும்பாலான பெற்றோரின் புகார். இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

    தாத்தா பாட்டிகள், குடும்ப அமைப்பில் குறிப்பாக இந்திய குடும்பங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாத்தா பாட்டியின் நிழலில் வளர்வது குழந்தைகளுக்கு எப்போதும் நன்மையே என்றாலும், குழந்தையின் பெற்றோர் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறையை ஏற்றுக் கொள்வதில்லை. செல்லம் கொடுப்பது முதல், உணவை வலுக்கட்டாயமாக கொடுப்பது, வேண்டாத அறிவுரைகள், அளவுக்கதிகமாக பிள்ளைகளை டிவி பார்க்க அனுமதிப்பது, என பல சந்தர்ப்பங்களில் தாத்தா பாட்டி குழந்தைகளை கெடுப்பதாக பெற்றோர் நினைக்கின்றனர்.

    உங்கள் சொந்த பிள்ளைகளை வளர்க்கும்போது உங்களை வளர்த்த பெற்றோரை விட வித்தியாசமான கண்ணோட்டத்தை நீங்கள் கொண்டிருக்கலாம்.

    உண்மையான பிரச்சனைகளும் தொந்தரவுகளும் தாத்தா பாட்டி அநாவசியமாக தலையிடும் போது அல்லது தாத்தா பாட்டியினரின் உணர்வுகளை நீங்கள் கருத்தில் கொள்ளாத போது தான் தோன்றுகிறது. இது இறுதியில் குடும்பங்கள் உடைய காரணமாகிறது.

    பெரும்பாலான குடும்பங்களில் தலைமுறை இடைவெளியால் தான் அதிக கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. இதனால் குழந்தைகள் தாத்தா பாட்டியை பார்க்கும் சந்தர்ப்பங்களை பெற்றோர் குறைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இங்கே சில குறிப்புகளைத் தருகிறோம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளனரோ அதே அளவுக்கு தாத்தா பாட்டியும் கொண்டுள்ளனர். எனவே முதியவர்களை விலக்கி வைப்பதை விட, அவர்களுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுத்தால், ஒரு இணக்கமான உறவு ஏற்படும்.

    பிரச்சனைகள் வரும்போது அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். இது நீண்ட காலத்திற்கு வலுவான உறவை கட்டமைப்பதோடு உறவுகளிடையே ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கும்.

    பிரச்சனைகளை கையாளும் போது நேர்மறையான அணுகுமுறையை பயன்படுத்துங்கள். தாத்தா பாட்டியினரின் அணுகுமுறை உங்கள் கருத்துக்களிலிருந்து முரண்படும் போது இதமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    குழந்தை வளர்ப்பில் உதவியாக இருப்பதற்காக உங்கள் பெற்றோருக்கு அடிக்கடி நன்றி சொல்லுங்கள். ஒரு கருத்து வேறுபாடோ சண்டையோ உங்கள் குழந்தைக்கும் தாத்தா பாட்டிக்கும் இடையே நிலவும் ஆரோக்கியமான உறவை பாதிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

    எவ்வளவு கோபம் இருந்தாலும் குழந்தைகளின் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை சமாதனமாக போய்விடுங்கள்.
    Next Story
    ×