search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்
    X
    குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்

    குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்

    குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
    நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. நாம் நம்பும்படியான சம்பவங்கள் நமது வீட்டிற்குள்ளும் நடக்கும். வெளியேயும் நடக்கும். ஆனால் அதன் உண்மை இன்னொருவிதமானதாக இருக்கும். அதுபோல் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எங்கேயாவது நடந்து, அது நமது கவனத்திற்கு வரும்போது ‘எங்கோ.. யாருக்கோ நடந்திருக்கிறது.. நமக்கென்ன..’ என்று கடந்துபோய் விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவம் நமது வீட்டிலும் நடக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படுவது நமது மகனோ, மகளாகவோ இருக்கவும்கூடும்.

    தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.

    பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.

    உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள்
    குழந்தை
    களிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.

    குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.

    வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.

    - விஜயலட்சுமி பந்தையன்.

    Next Story
    ×