
படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.
அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உரிய நேரத்தில் தூங்க செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்தி கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும். உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும்.
எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அதனை வெற்றியாளனாக உயர்த்தும்.