search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆன்லைன் வகுப்பு
    X
    ஆன்லைன் வகுப்பு

    மாணவ - மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு சாத்தியமா?

    மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன.
    கல்வியானது நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டு வருகிறது. அதாவது பழங்காலத்தில் குருகுல கல்வி வழக்கத்தில் இருந்தது. கால மாற்றத்தால் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., சமச்சீர் கல்வி என நாளுக்கு நாள் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் கல்வி முறை வந்துள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் மூடப்பட வேண்டிய பள்ளிக்கூடங்கள், முன்கூட்டியே மார்ச் மாத இறுதியிலேயே மூடப்பட்டு விட்டன. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளிகளும் அறிவித்துள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்போடு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆன்லைன் வகுப்புகள்

    கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்து விட்டது. கொரோனாவால் இந்த கல்வி ஆண்டில் இன்னமும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும் மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி விட்டது. இதற்கு அரசும் பச்சை கொடி காட்டி விட்டது.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. காலையில் வழக்கமாக பள்ளிக்கு செல்வது போன்று மாணவ- மாணவிகள் குளித்து முடித்து சீருடை அணிந்து தனது வீட்டிலேயே செல்போன் அல்லது லேப்-டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

    மாணவர்கள் உற்சாகம்

    ஆசிரியர்கள் வீடியோ காலில், அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாடம் எடுக்கின்றனர். வகுப்பு முடியும்போது வீட்டு பாடத்தை செய்து விட்டு நாளை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். இது மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த புதுவிதமான வகுப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    ஆனாலும் இந்த கல்வி முறை வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும். ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும், வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படும் என்றும், தமிழக மாணவர்கள் படிப்போடு ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள். எனவே நமது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடி வழிகாட்டல் அவசியம். எனவே நமக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒத்து வராது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. ஆனாலும் கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு ஏன்? எதிர்ப்பு எழுகிறது என்பது பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    ஏழை மாணவர்கள்

    ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆசிரியை தேவி:- ஆன்லைன் வகுப்பு என்பது நல்ல திட்டம் தான். இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடத்தின் மீதான கவனம் குறைவாக உள்ளது. ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கொண்டே பாடம் கவனிக்கின்றனர். நேரில் பாடம் எடுத்தாலே சில மாணவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாடங்களை கவனிப்பது இல்லை. வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதாவது கற்றுக்கொண்டால் நல்லதுதான். ஏழை மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் அல்லது லேப்டாப் அவசியமாகிறது. பல ஏழை குடும்பங்களில் இன்னமும் செல்போன், லேப்டாப் அறியாத பொருளாகவே உள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

    மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்:- கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வாழ் வாதாரத்துக்கே வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இருக்க அறிவு பசிக்கு எவ்வாறு இடம் கொடுக்க முடியும். ஆன்லைன் வகுப்புகள் சில மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பது எப்படி என்பது கூட தெரியாமல் உள்ளனர். அவர்களது பெற்றோருக்கும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரம் ஓரளவு தெரிந்தால்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். ஒரு மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியரால் மட்டுமே முடியும். ஆன்லைனில் எப்படி மாணவர்களை நல்வழியில் நடத்த முடியும். ஆன்லைன் வகுப்புகளை காட்டிலும் பள்ளிக்கூட வகுப்புகள் தான் சிறந்தது.

    வரவேற்பு

    நாகர்கோவிலை சேர்ந்த பிளஸ்-1 மாணவி சன்மதி:- நான் பிளஸ்-1 படித்து விட்டு, தற்போது விடுபட்ட பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இதற்காக தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறேன். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். ஆன்லைன் வகுப்பில் பிளஸ்-1 விடுபட்ட தேர்வுக்கும், பிளஸ்-2 பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. முதலில் பாடம் நடத்தப்படும். பின்னர் அதிலிருந்து வீட்டுப்பாடம் கொடுத்து, படிக்கச் சொல்வார்கள். மேலும் பாடம் தொடர்பாக வீடியோவும் அனுப்புவார்கள். இந்த வீடியோவை டவுன்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம். மேலும் எப்போது தேவை என்றாலும் வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள முடியும். இதனால் ஆன்லைன் வகுப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே சமயம் என்னுடன் படிக்கும் பலரிடம் செல்போன் இல்லை. எனவே அவர்களால் ஆன்லைன் வகுப்பு மூலம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கோகிலா:- என் மகன் கோணத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறான். மகள் பிளஸ்-1 வகுப்பில் விடுபட்ட தேர்வு எழுத இருக்கிறாள். 2 பேருமே தற்போது ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். மகனுக்கு தினமும் 3 வகுப்புகள் நடக்கின்றன. அவனுக்கு ஆன்லைனில் தேர்வும் நடக்கிறது. மகளுக்கு பிளஸ்-1 விடுபட்ட தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் படிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்கள். வீட்டில் வெகு நாட்களாக சும்மா இருக்கும் போது மாணவர்களின் கல்வி திறன் குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு நன்மைதான். எனவே ஆன்லைன் வகுப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டும்.

    இன்னும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடுமுறையில் நேரத்தை வீணாக்குவதற்கு பதில் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று கூறினாலும், இன்னும் லேப்- டாப், ஆன்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத வீடுகள் எத்தனையோ உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த ஆன்லைன் வகுப்புகள் எட்டாக்கனிதான் என்றும் பெற்றோர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதிகாரி

    இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகள் உள்ளன. 133 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 204 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 10 முதல் 15 அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தற்போதும் தொடர்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டால் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அதிலும் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு உத்தரவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்“ என்றார்.
    Next Story
    ×