search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம்
    X
    குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம்

    குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம்

    ஒரு சாதாரண குழந்தையை முழு மனிதனாக்குவது இல்லமே, அது தரும் பயிற்சியே. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, நல்ல குணங்களை மேம்படுத்துகின்ற தன்மையை அவர்களுக்கு அளிக்கும்.
    “புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடல்” என்கிறார் சிசிரோ. நமக்குள் உறைந்து, இறுகி இருக்கும் அறியாமையைப் பிளக்கும் கோடரி தான் புத்தகங்கள். நூறு நல்ல நண்பர்களின் அருமையை, சந்தோஷத்தை ஒரு புத்தகம் தந்து விடும். வாழும் முறையை, வாழக்கூடாத விதத்தை கற்றுக் கொடுக்கிறது புத்தகங்கள்.

    குழந்தைகளுக்கு முதலில் கற்றுத் தர வேண்டியது புத்தகங்கள், படிக்கும் பழக்கத்தை. இன்றைய குழந்தைகளின் உலகம் பரிதாபமானது. செயற்கை உலகத்தில், விரைவில் அழிந்துவிடக் கூடிய ஒரு உலகத்திற்குள்தான் இன்றைய கல்வி அவர்களை அழைத்துச் செல்கிறது. பரந்த உலக அறிவைப் பெற பாடப் புத்தகங்களை தாண்டிய அறிவும், அதைத் தருவது புத்தகங்கள் என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க யாருமில்லை.

    எல்லோருடைய உலகமும் மொபைலில் நுழைந்து விட்டது. அவரவருக்குத் தனி உலகம், நண்பர்கள். முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் ஆயிரக்கணக்கான நண்பர்கள் வைத்திருப்பவர்களுக்கு தங்கள் அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் மொபைலுடன் தங்கள் உலகத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால் அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். புது விஷயங்களை தெரிந்து கொள்ள, பார்க்க. அவர்கள் உலகம் தினசரி விரிந்து கொண்டே இருக்கிறது. வானவில் கனவுகளுடன், வர்ண ஜாலமாய் பட்டாம்பூச்சியாய் பறக்க விரும்பும் அவர்களுக்கு பறக்கக் கற்றுத் தர இன்று யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. அவர்களின் கல்வி முறை வெறும் தகவல்களை திரட்டும் விதமாகத்தான் இருக்கிறது.

    அவனின் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் முறையில் இல்லை. இயல்பான ஆற்றலை, சரியான, நேரிய வழியில் சிந்திக்க கற்றுத் தருவது இல்லை. நமக்குள்ளேயே எல்லா அறிவும் இருக்கிறது. அந்த விழிப்புணர்வை தூண்டும் கல்வியே இன்றைய தேவை. சொந்த அறிவைப் பயன்படுத்த தன் ஐம்புலன்களை பயன்படுத்த கற்றுத் தந்தால் போதும்.

    ஒரு குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு அவன் தன் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினரிடம் கற்றுக் கொள்ளும் விஷயங்களே அவனை முழுமையான அல்லது அரைகுறை மனிதனாகவோ ஆக்குகிறது. அவனுக்குள் இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்தி முழுமையாக்குவது வீடே.

    இந்த பிரபஞ்சத்தின் அற்புதமான விஷயம் மனிதன். அவனால் முடியாத விஷயம் எதுவும் இல்லை. அவனை பூரணமாக்குவது இல்லம். இல்லை என்றால் அது வெறும் வசிப்பிடம்தான். நல்ல குணங்களுடன், ஒரு நல்ல தாயாரால் வளர்க்கப் படும் குழந்தைகள்தான் மாமனிதர்களாக உருவாகிறார்கள். ஒரு இல்லம் விலை உயர்ந்த பொருட்களால் நிறைந்திருப்பதை விட நல்ல புத்தகங்களால் நிறைந்து, அன்பான மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அன்னையே முதல் ஆசிரியை. ஒரு பெண்ணுக்கு தனி பயிற்சி மையங்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர். படிப்பும், ஒழுக்கமும் நிறைந்த ஆசிரியர்கள் அங்கு பயிற்சி அளிக்க வேண்டும். கலைகள், வாழ்க்கை முறைகள், குடும்ப வாழ்வின் கடமைகள், நீதி, நெறி, தர்மம் போன்றவற்றை நவீன விஞ்ஞானத்துடன் கலந்து கற்பிக்க வேண்டும் என்கிறார். இதைப்போன்ற பெண்களின் குழந்தைகள் சிங்கக் குட்டிகளாய் உலகை ஆள்வார்கள்.

    ஒரு சாதாரண குழந்தையை முழு மனிதனாக்குவது இல்லமே, அது தரும் பயிற்சியே. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, நல்ல குணங்களை மேம்படுத்துகின்ற தன்மையை அவர்களுக்கு அளிக்கும். நம்மைப் பார்த்தே குழந்தைகள் நல்லதும், தீயதும் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை திருத்தினால் குழந்தைகள் திருந்தி விடும் என்று பிளாட்டோ கூறுகிறார். நம் குழந்தைகள் என்ன குணங்கள், பண்புகளோடு வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை முதலில் நாம் பின்பற்றி நடக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட, பெற்றோர்களே ஒரு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். அவர்கள் கேட்டுப் புரிந்து கொள்வதில்லை. பார்த்துதான் புரிந்து கொள்கிறார்கள்.

    அவர்களின் முழு அறிவையும் வெளிப்படுத்தும் கல்வியை நாம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. எது சரி, எது நல்லது, தீயது என்று அறிந்து கொள்ளும் அறிவைத் தருவது புத்தகங்களே. அவை பள்ளிப் புத்தகங்கள் அல்ல. வாழ்க்கை புத்தகங்கள். நல்ல புத்தகங்கள் எது என்பதை பெற்றோர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும்.

    இன்று பல குழந்தைகளுக்கு சரியான மொழியில் உரையாட, எழுதத் தெரிவதில்லை. புத்தகங்கள் படிப்பதன் மூலம் மொழி ஆற்றல் வளர்கிறது. அவர்களின் கற்பனை ஆற்றலும் வளர்கிறது. நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். நல்ல நீதிகளை சொல்லக் கூடிய கதைகள், இதிகாசம், புராணங்கள் இவற்றை எளிய முறையில், நடையில் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்.
    Next Story
    ×