என் மலர்
குழந்தை பராமரிப்பு

பெற்றோர்களுக்கான 12 குழந்தை வளர்ப்பு ஆலோசனைகள்
- குழந்தைகளை ‘ரிஸ்க்’ எடுக்க அனுமதியுங்கள்.
- குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்.
1. நம்பிக்கையை விதையுங்கள்:
குழந்தைகளிடத்தில், 'உன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அதையே அடிக்கடி கூறுங்கள். அதை அவர்கள் நம்பத் தொடங்குவார்கள். அந்த நம்பிக்கையே அவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும்.
2. காயங்கள் ஏற்படட்டும்:
குழந்தைகள் குதித்து விளையாடும்போது கீழே விழுந்து காயமடையட்டும். அவர்களை தடுக்காதீர்கள். அப்போதுதான் தோல்வியில் இருந்து எழுந்து, மண்ணைத் துடைத்துக்கொண்டு நடக்கக் கற்றுக் கொள்வார்கள்.
3. போட்டியிடுங்கள்:
அவர்களை போட்டிகளில் பங்கேற்கச் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற மாட்டார்கள். அதனை எதிர்பார்க்கவும் செய்யாதீர்கள். அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தோல்விகளை எதிர்கொள்ள அவர்களை பழக்கப்படுத்தும். தோல்வியை விட தோல்வி பயம் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதனை புரிந்து கொள்ளுங்கள்.
4. முயற்சி அவசியம்:
குழந்தைகளை 'ரிஸ்க்' எடுக்க அனுமதியுங்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களை செய்ய அனுமதியுங்கள். மரத்தில் ஏறட்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடட்டும். அது காயமடையக்கூடிய சூழ்நிலைகளில் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். மேலும் காயமடையலாம் என்று தெரிந்தால், அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதையும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
5. உயரட்டும்:
ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் முன்னோடிகளை விட அதிக வாய்ப்புகளை பெறுகின்றனர். உங்களுக்கு கிடைக்காத வாய்ப்புகளும், வளங்களும் அவர்களுக்கு கிடைக்கும். அவற்றை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு அவர்கள் பயன்படுத்தட்டும். அவர்களிடம் எதையும் திணிக்காதீர்கள்.
6. முன்மாதிரியாக இருங்கள்:
குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். அவர்களிடம் என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அதுவாகவே இருங்கள். உங்கள் நிலைப்பாட்டை மாற்றாதீர்கள். குழந்தைகளின் இதயத்தை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாதீர்கள்.
7. மோசமான நடத்தை:
குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும்போது அவர்களை திருத்தி வழிநடத்த வேண்டும். அவர்கள் ஏதாவது கெட்ட செயலைச் செய்யும்போது கண்டித்து திருத்த வேண்டும். அதில் தவறில்லை. சரியான நடத்தை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டுங்கள்.
8. குழந்தைகளை நம்புங்கள்:
அவர்களை நம்புங்கள். எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றி இருந்தால் அவர்களும் உங்களிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
9. அனுபவங்களைக் கொடுங்கள்:
உங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடன் பகிருங்கள். அனாதை இல்லங்கள், சுற்றுலா, அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு கிடைத்த அனுபவத்தைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.
10. கேளுங்கள்:
குழந்தைகளை எந்த விஷயமும் தெரியாதவர்கள் என்று நினைக்க வேண்டாம். அவசரப்பட்டு பதில் சொல்லவும் வேண்டாம். அவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள். அப்படி செய்தால் நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்று புகார் கூற மாட்டார்கள்.
11. ஒப்பிடாதீர்கள்:
பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று ஒப்பீடு. குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன்.
12. பாதுகாப்பான இடம் கொடுங்கள்:
அனைவருக்கும் பாதுகாப்பான இடம் தேவை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாக இருங்கள். எதுவுமே இல்லாமல், எதிர்பார்க்காமல் உங்களிடம் அன்பை பெறுகிறார்கள். நீங்கள் அவர்கள் மீது கோபமாக இருந்தாலும் கூட, எப்போதும் அவர்களை நேசிப்பீர்கள் என்பதை புரிய வையுங்கள்.






