search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

    • சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.

    தை மாதம் பூச நட்சத்திர மும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'முருகனுக்கு அரோகரா' என்று பக்தி பரவசத்துடன் கூறி சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யும் வகையில் 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் தாம்பரம், பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக இன்று இரவு 11 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக விலங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப் பூசத்தையொட்டி அதிகாலை மூல வருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காவடிகளுடன் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் பக்தி இன்னிசை பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்றனர். மலைக்கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் தைப்பூச விழாகளை கட்டியது.

    பொது வழியில் சென்று சுவாமி தரிசனத்திற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்தனர். காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.

    இன்று மாலை உற்சவர் சண்முகர் மயில் வாகனத்தில் மலைக்கோவில் மாட வீதியில் உலா நடை பெறுகிறது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி அடுத்த சின்ன காவனம் வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடை பெற்றது. இதில் ஏராள மானோர் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

    ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதில்சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.

    காஞ்சீபுரம் குமரக் கோட்டம் கோவிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சீபுரம் குமரக்கோட்டம் கோவிலில் உற்சவமூர்த்தி யான முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதிகாலை முதலே பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்ற கோஷத்துடன் முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் முருகப்பெருமான் கோவிலிலும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடந்தது

    திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சென்னை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வேண்டு தலை நிறைவேற்றும் வகையில் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மாட வீதியில் வலம் வந்தனர்.

    நேற்று இரவு கோவில் சரவணப் பொய்கையில் தெப்பல் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    Next Story
    ×