search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள்: இரவு வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது
    X

    கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

    திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள்: இரவு வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது

    • இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்துக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று ஒருநாளாவது தங்கள் குல தெய்வங்களான சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    குலதெய்வம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் உள்ளவர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமியை குலதெய்வமாக நினைத்து அங்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    குலதெய்வம் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்ச்சை கடனாக குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, ஆடு, கோழி, வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பங்குனி உத்திரம் பெரும்பாலான கோவில்களில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் இன்று காலை 11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளதால் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள குன்று மலை சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் அதிகாலை முதலே திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு மேல் தவசு காட்சிக்குச் சென்ற வள்ளியம்மனை அழைத்து வர சுவாமி புறப்படுதல், அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது.

    Next Story
    ×