search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மனிதர்களுக்கு தேவையான மூன்று அருட்கொடைகள் (நபி)
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மனிதர்களுக்கு தேவையான மூன்று அருட்கொடைகள் (நபி)

    • பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
    • தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.

    கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.

    அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.

    `(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.

    `பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.

    `எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.

    பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.

    இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.

    மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.

    அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.

    இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

    இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)

    எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    Next Story
    ×