search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் நடை திறந்த முதல் நாளில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
    X

    சபரிமலையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    சபரிமலையில் நடை திறந்த முதல் நாளில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

    • இன்றும், நாளையும் அதிகமானோர் வருவார்கள் என தகவல்.
    • சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்ப ட்டதால் நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் வருகை களைகட்டியது.

    கார்த்திகை முதல் நாளான 17-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

    முதல் நாளில் மட்டும் கோவிலுக்கு செல்ல சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர்.

    ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பினர். மேலும் முன்பதிவு செய்த நேரத்தில் வர முடியாதவர்கள் அன்று முழுவதும் ஏதாவது ஒரு நேரத்தில் வந்து தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கியூவில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை.

    சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    இம்முறை சபரிமலையில் அரசு சார்பில் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி தூய்மையான சபரிமலை, பிளாஸ்டிக் இல்லா சன்னிதானம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 13 இடங்களில் கூடுதல் முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே நாளை ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் இன்றும், நாளையும் சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக கோவிலில் சிற்பபு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×