search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி வழிபாடுகள்- 25
    X

    புரட்டாசி வழிபாடுகள்- 25

    • விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
    • புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

    2. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

    3. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

    4. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    5. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    6. விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    7. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

    8. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

    9. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

    10. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

    11. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    12. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1&வது, 5&வது சனிக்கிழமையில் போடுவார்கள். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    13. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.

    14. புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

    15. புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823&-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-&ந்தேதி மகனாகப் பிறந்தார்.

    16. புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

    17. தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழி பாடு கூடுதல் பலன்களைத் தரும்.

    18. புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்திசியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறு வதைக் தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    19. புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

    20. புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.

    21. புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22. புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

    23. புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

    24. கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

    25. சென்னையில் இருந்து திருப்பதி -திருமலைக்கு புனித பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது.

    Next Story
    ×