என் மலர்
வழிபாடு

ஜெயம் தரும் ஜெபம்
- ஜெபம் என்றால் `இறைவனிடத்தில் வேண்டுதல்' என்று பொருள்.
- நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.
அன்பானவர்களே, `ஜெபம்' என்றால் `இறைவனிடத்தில் வேண்டுதல்' என்று பொருள். இயேசு தன்னுடைய சீடர்களிடத்திலும், தன்னைப் பின்பற்றியவர்களிடத்திலும் "நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை எல்லாம் பெறுவீர்கள்' என்றார்.
வியாதியால் துன்பப்படும் காலங்களில், மனதின் விருப்பங்கள் நிறைவேற, இயேசுவை நோக்கி நாம் வேண்டினால் அவர் பதில் தருகிறார். நாம் வேண்டுதல் செய்யும் போது மற்றவர்களுக்காக ஜெபம் பண்ண வேண்டும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.
வேதாகமத்தில் எசேக்கியா என்னும் நேர்மையான ராஜா இருந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் ஒருமுறை கொடுமையான வியாதிப்பட்டு, மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்றார்.
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி `கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்' என்று விண்ணப்பித்து மிகவும் அழுதார். அவருடைய வேண்டுதலைக் கேட்டு கர்த்தர் உடனே பதில் கொடுத்தார். தீர்க்கதரிசி ஏசாயா பாதி முற்றத்தை கடந்து போவதற்குள் கர்த்தருடைய வார்த்தை ஏசாயாவை நோக்கி இறங்கியது.
"நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவிடம் உன் தகப்பனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்", என்று எசேக்கியா ராஜாவிடம் தெரிவிக்கும்படி கூறுகிறார்.
அன்பானவர்களே, இன்றைக்கு நாமும் ஏதோ ஒரு வியாதியால் மரணத் தருவாயில் இருக்கிறோமா? மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்களா? நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பிரார்த்தித்து நலம் பெறுவோம்.
வேதாகமத்தில் அன்னாள் என்று ஒரு பெண் குறித்த தகவல் உள்ளது. இவள் குழந்தைப்பேறு இல்லாமல், சமூகத்தால் பலவிதமான வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கிறாள். இவள் கர்த்தரிடம், "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல், நினைத்தருளி ஒரு ஆண் குழந்தையை கொடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு வேண்டுகிறாள்.
அவளுடைய விண்ணப்பத்தின் படியே கர்த்தர் அடுத்த ஆண்டிலேயே ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்து அவள் கண்ணீரை, களிப்பாக மாற்றுகிறார். இன்றைக்கு ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் குழந்தைப்பேறு இல்லாமல் வேதனையோடு, கண்ணீரோடு இருந்தால், இயேசுவிடம் முறையிடுங்கள், அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவர் நாமம் அதிசயம்.
வேதாகமத்தில் இயேசுவை மிகவும் நேசித்த மரியாள், மார்த்தாள் என்று இரண்டு சகோதரிகள் இருந்தார்கள்.அவர்களுடைய சகோதரன் லாசர் வியாதிப்பட்டு இறந்து விட்டான். இயேசு நான்கு நாட்கள் கழித்து அவ்விடத்திற்கு வருகிறார். லாசருடைய சகோதரிகள் இருவரும் இயேசுவினிடத்தில் வந்து "ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்று கூறி அழுதார்கள். அவர்களோடு கூட இருந்தவர்களும் அழுதார்கள், அவர்கள் எல்லோரும் அழுகிறதைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார்.
இயேசு அவர்களை நோக்கி: "உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்றார்.
பின்னர் இயேசு லாசருவை அடக்கம் செய்த இடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது, அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு 'கல்லை எடுத்துப்போடுங்கள்' என்றார்.
மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைநோக்கி: 'ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே' என்றாள்.
இயேசு அவளை நோக்கி 'நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா' என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள்.
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து "பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்" என்றார்.
இவைகளைச் சொன்னபின்பு "லாசருவே, வெளியே வா" என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். மரித்த லாசர் உயிரோடு வெளியே வந்தான். மரித்து நான்கு நாட்களான லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு, நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
இன்றைக்கு நாமும் ஏதோ ஒரு வேதனையான சூழ் நிலையில், மனக் கஷ்டத்தோடு பாரத்தோடு தனிமை உணர்வில் இருக்கின்றோமா, மரணப்படுக்கையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றோமா, மனதின் விருப்பங்கள் நிறைவேறாமல் தவிப்போடு இருக்கின்றோமா, எதிர்காலத்தைக் குறித்து கலக்கப்படுகிறோமா... இயேசுவை நோக்கி ஜெபிப்போம், ஊக்கமுடன், இடை விடாமல் ஜெபிப்போம், ஏற்ற நேரத்தில் அவரிடம் இருந்து ஆறுதல் பெறுவோம்.
உண்மையாக தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் இயேசு சமீபமாயிருந்து, உதவி செய்கிற தேவனாயிருக்கிறார். அவரால் செய்ய கூடாத அதிசயம் ஒன்றுமில்லை. ஆமேன்.






