என் மலர்
வழிபாடு

நலம் தரும் நரசிம்மர் வழிபாடு
- நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
- வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.
நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது.
இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.
அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு.
ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.






