search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-22)
    X

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-22)

    • எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
    • அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே!

    திருப்பாவை

    பாடல்

    அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான

    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

    சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,

    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

    அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    இந்த பூமியை ஆட்சி செய்த பல அரசர்கள், நீ பள்ளிகொண்டிருக்கும் கட்டில் அருகே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போன்றே நாங்களும் உன் அருளை நாடி வந்து நிற்கிறோம். கிங்கிணி வாயைப்போல மலர்ந்திருக்கும் தாமரைப் பூ மெதுவாக மலர்வதைப் போல உன் சிவந்த கண்களை சிறுகச்சிறுக திறந்து எங்களைப் பார்த்து அருளக்கூடாதா? சூரியனையும், சந்திரனையும் இருவிழிகளாக கொண்டவனே! சூரியனைக் கண்டவுடன் மலரும் தாமரை போல உன் திருக்கண் பார்வையால் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

    அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்

    கருணையின் சூரியன் எழஎழ நயனக்

    கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்

    திரள் நிரை அறுபதம் முரல்வன இவையோர்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

    அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கு திசையில் வந்துவிட்டான். இருள் விலகி ஒளி பரவிவிட்டது. சிவபெருமானே! உன் திருமுகத்தில் தோன்றும் கருணையைப் போல் சூரியன் மெல்ல மெல்ல மேலே எழுகின்றான். உன் தோட்டத்து மலர்கள் எல்லாம் உன் அழகிய இதழ் விரிவதைப்போல மலர்கின்றன. வண்டுகள் இசை பாடு கின்றன. அந்த வண்டுகள் மலரில் உள்ள தேனை பரிசாகப்பெறும் அடியார்களும் உன்னைப்பாடி துதிக்கிறோம். அருள்நிதியை அருள வேண்டும். திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே! எல்லை இல்லாத அலைகள் வீசும் பெருங்கடல் போன்றவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து வருவாயாக!

    Next Story
    ×