search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவராத்திரி: குமரியில் நாளை தொடங்குகிறது சிவாலய ஓட்டம்
    X

    சிவராத்திரி: குமரியில் நாளை தொடங்குகிறது சிவாலய ஓட்டம்

    • பக்தர்கள் 12 ஆலயங்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

    என்று சிவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர். தமிழகத்தில் புகழ்பெற்ற பல்வேறு சிவாலயங்கள் உள்ளன. அதில் குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    சிவாலய ஓட்டம் ஒருபுறம் நடந்தாலும், ஓடமுடியாத பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் போன்றவற்றில் சென்று சிவத்தலங்களை தரிசிக்கின்றனர். சிவாலய ஓட்டக்காரர்களுக்கு வழிப்பாதையில் மோர், பானகம், சுண்டல் மற்றும் கஞ்சி போன்றவற்றை ஆங்காங்கே மக்கள் வழங்குவார்கள். பொன்மனை கோவிலில் பலாக்காய் எரிசேரி கறியும், தினை அரிசிக் கஞ்சியும், நல்லமிளகு நீரும் கொடுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. தற்போதும் கல்குளம் கோவிலில் பக்தர்களுக்கு சுவையான குழம்புகளுடன் வயிறு நிரம்ப சாப்பாடும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான மகாசிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகும். இதையொட்டி சிவாலய ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் தொடங்குகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அங்கிருந்து மற்ற 11 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள்.

    பன்னிரு சிவாலயங்களில் நட்டாலம் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. சிவாலய ஓட்டக்காரர்கள் கையில் விசிறியும், கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையும் வைத்திருப்பார்கள். இந்த ஓட்டத்தின்போது பக்தர்கள் காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டுவது வழக்கம். கருவறை சிவனைப் பார்த்து விசிறியால் வீசுவது இப்போதும் நடைமுறையில் உள்ளது.

    Next Story
    ×