search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-4)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-4)

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    Next Story
    ×