search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜெபமே ஜெயம்: பரலோக காட்சி
    X

    ஜெபமே ஜெயம்: பரலோக காட்சி

    • பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே.
    • கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    மோட்சம் அல்லது பரலோகமென்று குறிக்கப்படும் கடவுளிருக்கும் இடத்தைப் பற்றி வேதத்தில் அநேக குறிப்புகள் இருந்தாலும், பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. அதில் குறிப்பிடும்படியான ஒருவர் - ஏசாயா என்னும் இறைவாக்கினர்.

    உசியா என்னும் யூதாவின் அரசன் மரித்த ஆண்டில் நடைபெற்றதாக ஏசாயா - 6-ம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் இச்சம்பவம், பரலோகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் சிறப்புகளை, குணாதிசயங்களை மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம்.

    தன்னுடைய பதினாறாம் வயதில் யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்ட உசியா மன்னன் - யூதாவின் சிறந்த மன்னர்களில் ஒருவர். தன்னுடைய இளவயதில் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்த உசியா மன்னன், கடவுளின் துணையுடன் எதிரிகளை வீழ்த்தினார்.

    யூதாவின் தலைநகரமாகிய எருசலேமை சுற்றியிருந்த மதில்களை பலப்படுத்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். மக்களுக்காக குளங்களை வெட்டினார். இப்படி சிறப்புடன் வாழ்ந்த உசியா மன்னன் வலிமை மிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான்.

    கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பரிசுத்த தலத்திற்குள் சென்று தூபம் காட்ட முற்பட்டான். ஆசாரியர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் உசியாவோ, அவர்கள் மேல் கோபங்கொண்டார். அப்படி அவர் ஆசாரியர்களிடம் கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியர்களுக்கு முன்பாகவே குஷ்டரோகியானார். கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    இனி இந்த நாட்டை ஆளப்போவது யார்? மன்னரையே குஷ்டரோகியாக்கும் வல்லமை படைத்த கடவுள் யார்? என்னும் கேள்விகளோடு இறைவாக்கினர் ஏசாயா ஆலயத்திற்கு வந்தபோது `ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதையும், அவரது வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்கிறதையும், சேராபீன்கள் என்னும் தூதர்கள் பறந்த வண்ணம் `சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது' என்று ஒருவரையொருவர் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறதையும். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து ஆலயம் புகையினால் நிறைந்திருக்கிறதையும் (ஏசாயா 6: 1-4) காண்கிறார்'.

    இங்கே கடவுளின் குணாதிசயங்களாக நாம் காண்பது, கடவுளின் மாட்சிமை, கடவுளின் பரிசுத்தம், கடவுளின் மகிமை. இதைப் பார்த்த அடுத்த கணமே, தன் உள்ளத்தில் குத்தப்பட்டவராய், இத்தகைய கடவுள் முன் நிற்பதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்றுணர்ந்து 'ஐயோ, நான் அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' என்றார்.

    உடனே சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாய விடத்தில் பறந்து வந்து, அதினால் அவர் வாயைத் தொட்டு: `இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது' என்றான்.

    இப்படியாக தன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற ஏசாயா தான், இந்த உலகத்திலுள்ள மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக இம்மானுவேல் பிறப்பார் என்றும் (ஏசாயா 7:14), அவர் பாடனுபவிப்பவராய், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவராய், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, மரிப்பாரென்றும் முன்னறிவித்தார் (ஏசாயா 53).

    அந்தபடியே, கடவுளுக்கு சமமாயிருந்த இறைமகன் இயேசு (பிலிப்பியர் 2:6), உலகத்தாரின் பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாய், இம்மானுவேலாய் (மத்தேயு 1:22,23) இந்த உலகில் பிறந்தார். ஒடுக்கப்பட்டோர், கை விடப்பட்டோர் மற்றும் பாவி களின் நண்பனாய் இந்த உலகில் சுற்றித்திரிந்தார். கடவுளின் சித்தப்படியே சிலுவையில் மரிக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

    இன்று இறைமகனார் இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததை நினைவுகூரும் புனித வெள்ளி சிலுவைக் காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவருவோம்.

    உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் கடவுளின் அருகிலிருந்த இயேசு, இப்பொழுது உயரமான மலையில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிரம்பிற்று என்றிருந்தவர், இப்பொழுது, வஸ்திரமில்லாமல், அவருடைய அங்கியையும் போர்வீரர்கள் சீட்டுப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணமிருக்கிறார்.

    தூதர்களால் சூழப்பட்டிருந்தவர், இப்பொழுது கள்வர்கள் நடுவில் அறையப்பட்டிருக்கிறார். பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றப்பெற்றவர், சுற்றி நின்ற மக்களின் கேலிப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆம், 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று சொல்லியிருக்கிறபடி, பாவிகளான நம்மேல் கடவுள் கொண்ட அன்பைக் காட்டும்படியாக, தன்னுடைய மாட்சிமை, தன்னுடைய பரிசுத்தம், தன்னுடைய மகிமை அனைத்தையும் துறந்தார்.

    இந்த சிலுவைக் காட்சியை பார்க்கும் நாம், அன்று ஏசாயா தன்னுடைய பிழைகளை உணர்ந்து, அதை அறிக்கை செய்து, சுத்தமானது போல், நம்முடைய பாவங்களை உணருவோம், அவர் தரும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம், அவரின் அன்பை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்.

    Next Story
    ×