என் மலர்
வழிபாடு

விஷ்ணுவின் சாபத்தால் குதிரையாக மாறிய லட்சுமி தேவி
- குதிரையாக மாறி பூலோகம் சென்றாள் லட்சுமி தேவி.
- ஆயிரம் வருடங்களாக சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள்.
சூரிய பகவானுக்கு 'ரேவனிதா' என்ற மகன் இருந்தான். அவனுடைய குதிரைக்கு 'உச்சைஸ் ரவஸ்' எனப்பெயர். பாற்கடலைக்கடைந்தபோது வெளிவந்த குதிரை அது- ரேவனிதா. ஒரு முறை வைகுண்டத்தை நோக்கி, பகவான் விஷ்ணுவை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை தூரத்தில் இருந்து பார்த்த லட்சுமி தேவி, தன்னுடைய பார்வையை அவன் பயணித்து வந்த குதிரையின் மீதிருந்து எடுக்கவில்லை. அதன் அழகில் லயித்திருந்தாள். அதனால் விஷ்ணு, 'யார் வருகிறார்கள்? ' என சில முறை கேட்ட போதும் லட்சுமி தேவிக்கு அது காதில் விழவில்லை.
இதனால் கோபம் கொண்ட விஷ்ணு பகவான். 'சாதாரண மனிதர்களைப் போல உன் மனமும் சலனமடைகிறது. அதனால் என் பேச்சு கூட உன் காதில் விழ வில்லை. எனவே நீ ஒரு குதிரையாக பூலோகத்தில் பிறப்பாய்' என்று லட்சுமிக்கு சாபம் அளித்தார்.
இதனால் வருத்தம் அடைந்த லட்சுமி, 'எப்போதும் உங்களை விட்டு பிரியாத நான் செய்த சிறு பிழைக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று கேட்டாள். அதற்கு விஷ்ணு, 'சில காலம் நீ பூலோகத்தில் இருந்து உன் தவத்தால் குழந்தை பேற்றை அடைந்து மீண்டும் என்னை வந்தடைவாய்' என்றார்.
குதிரையாக மாறி பூலோகம் சென்றாள் லட்சுமி தேவி. ஒரு முறை சூரியனின் மனைவி சஞ்சனா கூட குதிரையாக மாறி உள்ளார். அஸ்வினி குமாரர்கள் அவளது பிள்ளைகளே. சஞ்சனா எங்கு தவம் இயற்றினாளோ, அதேஇடத்திற்கு லட்சுமிதேவி தவம் இயற்றச்சென்றாள். தான் ஒரு குழந்தையைப் பெற்றால்தான் வைகுண்டம் திரும்ப இயலும் என்ற வார்த்தையால், ஆயிரம் வருடங்களாக சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள்.
இதைப் பார்த்த மகாதேவனுக்கு ஆச்சரியம்! அவர் அங்கு தோன்றி.."ஏன் விஷ்ணுவை வழிபடாமல் என்னை நோக்கி தவம் செய்கிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு லட்சுமி தேவி, "உங்களுக்கும், பகவான் விஷ்ணுவுக்கும் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை" என்றாள்.
"அது எப்படி உனக்குத் தெரியும்?" என்று கேட்டார் ஈசன்.
அதற்கு லட்சுமி தேவி, "அதை நான் பகவான் விஷ்ணுவிடம் இருந்தே தெரிந்துகொண்டேன்.
ஒரு முறை அவர் தியானத்தில் இருந்தார். அவர் தியானத்தில் இருந்து வந்ததும், நான் அவரிடம் 'பாற்கடலில் இருந்து நான் வெளிவந்தபோது உங்களையே தேவாதி தேவனாய் கண்டேன். மனதில் கணவராக வரித்தேன். அப்படிப்பட்ட தேவதேவனான தாங்கள், யாரை நோக்கி தவம் செய்கிறீர்கள்' என்று கேட்டேன்.
அதற்கு அவர், `சிவனை நோக்கி தவம் இருந்தேன். சிவனும் என்னை நோக்கி தியானிப்பார். நாங்கள் இருவருமே ஒன்றுதான் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் ஒன்றுபட்டவர்கள். என்னுடைய பக்தர்கள் சிவனிடம் வேற்றுமையும். வெறுப்பும் கொண்டால் நிச்சயம் நரகம் செல்வர்' என்று கூறினார். அதனால் தான் நான் உங்களை நினைத்து தவம் இயற்றினேன்" என்று முடித்தாள் லட்சுமிதேவி.
இப்போது ஈசன், "கவலைப் படாதே.. நான் விஷ்ணுவை இங்கே ஒரு குதிரையாக வரச் செய்து, அவர் மூலமாக உனக்கு குழந்தைப்பேறு வழங்குவேன். நீ இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம், மனதை ஜெகதாம்பா மகாமாயையிடம் இருந்து எடுத்ததால் தான். மகாமாயையை மனதில் நிறுத்தினால், அந்த மாயை வேறு எண்ணங்களுக்குள் நம்மை செல்ல விடமாட்டாள்" என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து குதிரை வடிவில் இருந்த லட்சுமிதேவி, மகாமாயையை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினாள். இந்த நேரத்தில் சிவபெருமான், மகாவிஷ்ணுவுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் 'தேவி அருகில் இல்லை எனில், வாழ்க்கை என்று ஒன்று இல்லை.
அவ்வாழ்க்கை ஒருவரை துன்பத்திற்குள்ளாக்கும். நானும் ஒரு முறை சதியைப் பிரிந்து இந்த துயரை அனுபவித்துள்ளேன். அதை தாங்களும் அறிவீர்கள். அதை தாங்களே பரிசோதித்துப் பார்த்தால் உண்மை தெரியவரும். எனவே ஒரு குதிரை வடிவில் தேவியை அடைந்து, ஒரு மகனை தந்து, தேவியை வைகுண்டம் அழைத்து வர வேண்டும்' என்று கூறியிருந்தார்.
விஷ்ணு பகவான், 'இப்படி எவராவது சொல்லமாட்டார்களா' என்று தான் காத்துக்கொண்டிருந்தார். ஈசனின் மொழி கிடைத்ததும், அவர் குதிரை வடிவில் லட்சுமியின் இருப்பிடம் சென்று, அவளுடன் இணைந்து ஒரு மகனைப் பெறச் செய்தார்.
அவன் பெயர் 'ஹய் ஹய்யா'. விஷ்ணு அந்த பிள்ளையை, குழந்தை இன்றி தவித்து' வந்த ஹரிவர்மா என்ற அரசனிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் ஹய்ஹய்யாவின் மூலம் ஒரு வம்சத்தை உருவாக்கினார். இந்த வம்சத்தில் பிறந்தவன்தான் கார்த்தவீர்யார்ஜூனன்.






