search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கங்கை தீப ஆராதனை உலகப்புகழ் பெற்றது
    X

    கங்கை தீப ஆராதனை உலகப்புகழ் பெற்றது

    • சங்கினால் நீர் தெளித்து, புஷ்ப அர்ச்சனை செய்கிறார்கள்.
    • ஒரு கையில் தூக்குவது மிகவும் சிரமம்.

    ஹரித்துவாரில் கங்கைக்கு நடக்கும் தீப ஆராதனை உலகப்புகழ் பெற்றது. இதனைப்போலவே, காசியில் உள்ள கங்கையின் கரையிலும் தினசரி மாலை சுமார் 6.45 மணிக்கு தீப ஆராதனை சடங்குகள் தொடங்கி சுமார் 8 மணிக்கு முடிவடைகிறது.

    தினசரி நடக்கும் இந்த பூஜைகளின் பெரும்பாலான செலவை கங்கா சேவா நிதி என்கிற டிரஸ்ட் ஏற்றுக்கொள்கிறது. பொதுமக்கள் ஒரு நாள் பூஜைக்கு ஒரு சிறிய பங்கான 551 ரூபாயை இந்த குழுவினரிடம் முன்பணமாக கட்டினால் அவர்கள் விரும்பும் தினத்தில் இந்த பூஜை அவர்கள் சார்பில் செய்யப்படும்.

    தினசரி பூஜைகளை நடத்த இத்தகைய உதவி செய்தவர்களை தீப ஆராதனை தொடங்கும் முன்பு படிக்கட்டுகளின் ஓரத்தில் ஒரு சோபா போட்டு உட்காரச்சொல்லி கங்கைக்கு அவர்களைக் கொண்டு பூஜை செய்யச் சொல்கிறார்கள். ஒரு சோபா போட்டு உட்காரச் சொல்லி கங்கைக்கு பால் அபிஷேகம் செய்து, புஷ்ப அபிஷேகம் செய்து, தூப தீபங்கள் காட்டி. இதனோடு மந்திரங்களைச் சொல்லி கங்கைக்கு பூஜை செய்பவர்கள் பாக்கிய சாலிகள். இந்த சடங்கு முடிந்ததும் கங்கைக்கு தீப ஆராதனை சடங்குகள் தொடங்குகின்றன.

    பஜனைப்பாடல்களைப் பாடுபவர்கள், நுமேம மாதா அபிதமார்த்துமேவா என்கிற சுலோகத்துடன் தொடங்குகிறார்கள். ஊதுவத்தி ஏற்றி ஒவ்வொரு திசையாக 4 திசைகளிலும் ஊது பத்தியைக் காண்பிக்கிறார்கள், பின்னர் பஜனைப் பாடல்களும், சங்கின் நாதமும், சேமங்களின் நாதமும் தொடர்ந்து இடை விடாமல் கேட்கின்றன.

    சங்கினால் நீர் தெளித்து, புஷ்ப அர்ச்சனை செய்கிறார்கள். சுற்றி அமர்ந்திருக்கும் ஆயிரக் கணக்கான பேர்களைப் பார்க்கிறோம். இவர்களில் கணிசமான பகுதியினர் மேலைநாட்டினார். பெர்முடா போட்டுக் கொண்டு, கையில் காசி கயிறும், மேல் உடம்பில் காவி நிறத்தில் பனியனும், அதில் ஓம் என்கிற சமஸ்கிருத எழுத்தும், கணபதியின் படம்போட்ட டீ ஷர்ட்டுகளும் அணிந்து பாடப்படும்.

    பஜனைப்பாடல்களுக்கு ஏற்ப தாளம் போட்டு, தன்னை மறந்து அந்த சூழ்நிலையில் லயித்துக் காணப்படுகின்றனர். படித்துறையின் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் படகுகளில் இருந்து ஏராளமான பேர் வீடியோ எடுக்கிறார்கள்.

    பாடப்படும் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமையாக நம்மைத் தாளம்போட வைக்கிறது. அடுத்ததாக நீளமாக வளைந்த பிடி உள்ள குழியான கின்னத்தில் சாம்பிராணி போட்டு, மண்டியிட்டு, நெஞ்சுக்கு நேராக, தலைமேல் உயர்த்தி 4 திசைகளிலும் காண் பிக்கிறார்கள்.

    சங்கினுள் கங்கை நீரை ஊற்றி தெளித்துவிட்டு அடுத்ததாக அடுக்கடுக்கான தட்டுகளில் அகல்கள் நிறைந்த கோபுர விளக்கை ஒரு கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மிகவும் கனமான விளக்கு அது. ஒரு கையில் தூக்குவது மிகவும் சிரமம். இப்பேர்ப்பட்ட கனமான கோபுர விளக்கை, வலது கையால் தூக்கிக்கொண்டு இடது கையால் மணியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    பாடல்களில் ஒலியும், சங்கின் ஒலியும். சேமங்கலத்தின் ஒலியும், உம்ருவின் ஒலியும் சேர்ந்து ஒரு விதமான சொற்களால் விவரிக்க முடியாத ஒரு விதமான மாயலோகத்தை உண்டாக்குகின்றன.

    இந்த கோபுர விளக்கையும் 4 திசைகளிலும் தூக்கி காண்பிக்கிறார்கள். பிறகு மணிகளை கீழே வைத்துவிட்டு கைகளாலும் தூக்கி தலைக்கு மேலே காண்பிக்கிறார்கள்.

    இறுதியாக மகா ஆரத்தி நடக்கிறது. நாகக் குடையுடன் நீண்ட வளைவான பிடி யுள்ள குழிவான பாத்திரத்தில் நிறைய கற்பூரக்கட்டிகளைப் போட்டு ஏற்றுகிறார்கள்.

    உம்ரு மிகவும் வேகமாக ஒலிக்கிறது. சேமங்கலமும் துரிதகாலத்தில் அந்த இடம் முழுவதும் பொன் நிறத்தில் ஒளி பரவி ஒரு ரம்யமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

    பஜனைப் பாடல்கள் உச்சஸ்தாயில் பாடப்படுகின்றன. பிறகு ஆரத்தியை கீழே வைத்துவிட்டு, மணியடித்து நீர் தெளிக்கிறார்கள்.

    கங்கைக்கு புஷ்பம் அர்ப்பிக்கிறார்கள். நைவேத்தியம் படைக்கிறார்கள். இரவு நேரம் நெருங்கி வருகிறதல்லவா. காலையில் இருந்து ஓடி ஓடி களைத்த மூழ்கி குளிப்பவர்களின் பாவங்களைக் கழுவிய முதிர்ந்த தாயான கங்கைக்கும் சற்று ஓய்வு வேண்டாமா? கங்கையை உறங்க வைக்க தாலாட்டு பாடுகிறார்கள். மிகவும் இனிமையான மயக்கக் கூடிய ராகத்தில் பாடும் பாட்டைக் கேட்க நமக்கும் உறக்கம் வருகிறது.

    கங்கை சுகமாக உறங்க மயில் பீலி விசிறியால் வீசுகிறார்கள். களைத்துப் போன கங்கையின் திருமுகத்தை 5 பேர்களும் தங்கள் கைகளில் இருக்கும் மஞ்சள் நிறப்பட்டுத் துணி யால் இதமாக துடைத்து விடுகிறார்கள். வெண் சாமரம் வீசுகிறார்கள்.

    தாலாட்டுப் பாட்டு மெதுவாக மெதுவாக கங்கையை உறங்க வைத்துவிட்டு முடிவுக்கு வருகிறது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி! என்று சொல்லிவிட்டு போலோ கங்கா மாதாக்கி ஜெய் என்று சொன்னதும், அனைவரும் கங்கா மாதாக்கீ ஜெய் என்று சொல்கிறார்கள்.

    இதர தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி பிரார்த்தனை செய்துவிட்டு, இறுதியில் நம பார்வதி பதையே என்று சொல்ல, எல்லோரும் ஹரஹர மகாதேவா என்று சொல்லும் சப்தம் எத்தனையோ கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும். இத்துடன் கங்கைக்கு தீப ஆராதனை முடிவடைகிறது. இது முடிவடைந்ததும் பலரும் கங்கை ஆற்றில் கால்களைக் கழுவி, தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்கிறார்கள்.

    Next Story
    ×