search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெருநாள் தொழுகையும், கொண்டாட்டமும்
    X

    பெருநாள் தொழுகையும், கொண்டாட்டமும்

    • பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள்.
    • நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    உலக முஸ்லிம்கள் ஒரு மாத காலம் புனித ரமலானில் நோன்பு நோற்று, அதன் பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப்பெருநாள் ஆகும்.

    இறைவன் நமக்கு அளித்த பாக்கியங்களுக்கு நன்றி பாராட்டும் நன்னாள்தான் பெருநாள். அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஆனந்தமாகக் கொண்டாடும் ஆனந்தத் திருநாள் தான் ரம்ஜான் பெருநாள்.

    நோன்புப் பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நற்செயல்கள் என்னவெனில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அதிகாலை நேரத்தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். பிறகு, புத்தாடை அணிந்து, நறு மணம் பூசி, ஏதேனும் உணவு, பழங்களை ஒற்றைப்படையில் சாப்பிட வேண்டும்.

    சூரியன் உதயமாகி அதன் நிழல் மூன்று மீட்டர் அளவு சாயும் நேரம் வந்தவுடன் ஊர் மக்கள் ஒன்று கூடி, ஒற்றுமையாக திடல் நோக்கி செல்ல வேண்டும். அதற்கு முன்பு ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு, விளிம்பு நிலையில் வாழும் பொருள் இல்லாதோருக்கு நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் செல்லும் போது வழியில் தென்படும் ஏழைகளுக்கு ஈகையை அள்ளி வழங்கிட வேண்டும்.

    தொழுகை முடிந்ததும் அமைதியாக கலைந்து சென்று, இல்லம் திரும்பும்போது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில் தென்படும் ஏழை களுக்கும் ஈகைகளை வாரி வழங்கிட வேண்டும்.

    `சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    நோன்புப் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையான அதே ஆண்டில் கடமையாக்கப்பட்டது. முப்பது நாட்கள் நாம் நோன்பு வைப்பதற்கு உதவிய இறைவனுக்கு நன்றி பாராட்ட இறைவன் வகுத்துக் கொடுத்த தினம் தான் பெருநாள் தினம். வகுத்துக் கொடுத்த தொழுகைதான் நோன்புப் பெருநாள் தொழுகை. நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை முடிந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.' (அறிவிப் பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும்-பின்னும் எதையேனும் தொழவில்லை.

    பிறகு, பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) இருந்தார். தர்மம் செய்வதின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு விளக்கினார்கள். பெண்கள் தங்கள் பொருட்களைப் போட்டனர். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும், வளையல்களையும் போடலானார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    பெருநாள் தினத்தின் தொழுகையிலும் கூட இறைவனுக்கு அடுத்து ஏழைகளின் நலனை நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கான தர்மங்களை வசூல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து வைத்தார்கள்.

    நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒன்று கூடி, அறுசுவை விருந்து படைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்து பிறரையும் உண்டு மகிழச் செய்து, எல்லோரிடமும் இணங்கி பெருநாளைக் கொண்டாட வேண்டும்.

    இரண்டு பெருநாட்களிலும் விதவிதமான உணவு பண்டங்களை சமைத்து, வயிறார உண்டு பிறரின் பசியையும் போக்க வேண்டும். இரண்டு பெருநாட்களிலும் பட்டினியாக இருந்து நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

    `நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள், மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.' (ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

    1) பெருநாளில் இறைவனை வணங்கி வாழவேண்டும்,

    2) இல்லாதவருக்கு வழங்கி வாழ வேண்டும்,

    3) எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும்.

    இதுதான் இஸ்லாமிய இரு பெருநாட்களின் தத்துவமாக அமைந்துள்ளது. பெருநாள் அன்று இனிய மாலைப் பொழுதினிலே கேளிக்கை, நையாண்டி, ஆடல்-பாடல் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் உறுதியுடனும், மன வலிமையுடனும் மனநிறைவாக மகிழ்ந்து கொண்டாடுவோம்.

    பெருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது. மார்க்கத்திற்கு முரணாக உள்ள அனாச்சாரங்களில் ஈடுபடக்கூடாது.

    Next Story
    ×