search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சகல ஐஸ்வரியங்களும் அருளும் குபேரேஸ்வரர்
    X

    சகல ஐஸ்வரியங்களும் அருளும் குபேரேஸ்வரர்

    • 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம்.
    • அஷ்ட லிங்கங்களில், `குபேரலிங்க’ தலம் என்று போற்றப்படுகிறது.

    கோவில் தோற்றம்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். அதுபோல தொண்டை நாட்டில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமான திருவேற்காடு பாலாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றியும் எட்டு திசைகளில், அஷ்ட லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. திருவேற்காடு திருத்தலமானது `வடவேதாரண்யம்' என்றும், `வடதிருமறைக்காடு' என்றும் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம், இந்த திருவேற்காடு.

    இந்த திருத்தலத்தைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும், அந்தந்த திசைகளுக்குரிய அஷ்டதிக் பாலகர்களும், அஷ்ட லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாக திருவேற்காடு புராணம் தெரிவிக்கிறது. அஷ்டதிக் பாலகர்களும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட எட்டு லிங்கங்களும், அந்தந்த பகுதிகளில் ஆலயங்களாக எழுந்து நிற்கின்றன.

    வள்ளிக்கொல்லைமேடு என்ற ஊரில் (கிழக்கு) ஞானாம்பிகை சமேத இந்திரசேனாபதீஸ்வரர் (இந்திரலிங்கம்) திருக்கோவிலும், நூம்பல் என்ற கிராமத்தில் (தென்கிழக்கு) ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் (அக்னிலிங்கம்) திருக்கோவிலும், சென்னீர்குப்பம் என்ற ஊரில் (தெற்கு) மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் (எமலிங்கம்) திருக்கோவிலும், பாரிவாக்கம் என்ற ஊரில் (தென்மேற்கு) பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் (நிருதிலிங்கம்) திருக்கோவிலும், மேட்டுப்பாளையம் என்ற ஊரில் (மேற்கு) ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் (வருணலிங்கம்) திருக்கோவிலும், பருத்திப்பட்டு என்ற ஊரில் (வட மேற்கு) விருத்தாம்பிகை சமேத வாழ வந்த வாயுலிங்கேஸ்வரர் (வாயுலிங்கம்) திருக்கோவிலும், சுந்தரசோழபுரம் என்ற ஊரில் (வடக்கு) வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் (குபேரலிங்கம்) திருக்கோவிலும், சின்னகோலடி என்ற ஊரில் (வட கிழக்கு) பார்வதி சமேத ஈசான லிங்கேஸ்வரர் (ஈசானலிங்கம்) திருக்கோவிலும் அமைந்துள்ளன.

    இந்த அஷ்ட லிங்க ஆலயங்களில் இங்கே நாம் பார்க்க இருப்பது, சுந்தரசோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் ஆலயத்தைத்தான். இந்த ஆலயம் அஷ்ட லிங்கங்களில், `குபேரலிங்க' தலம் என்று போற்றப்படுகிறது.

    கி.பி.957 முதல் கி.பி.973 வரை பதினாறு ஆண்டுகள் சோழநாட்டை ஆண்டவர் சுந்தர சோழன். இவருடைய பெயரால் திருவேற்காட்டிற்கு அருகில் அமைந்த ஊர் சுந்தரசோழபுரம். இவ்வூரில்தான், குபேரலிங்க ஸ்தலமான வேம்புநாயகி அம்பாள் உடனாய குபேரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அஷ்ட லிங்கங்களில் ஏழாவது திருக்கோவிலான இத்தலம், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது.

    கோவிலுக்குள் கொடிமரம் அற்புதமாக காட்சி தருகிறது. தொடர்ந்து பலிபீடம் மற்றும் நந்தியம்பெருமான் சன்னிதி அமைந்துள்ளன. கருவறையில் ஈசன் லிங்க சொரூபத்தில் குபேரேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கருவறைக்கு வெளிப்புறத்தில் துவாரபாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவறைக்கு அருகில் அமைந்துள்ள சன்னிதியில் வேம்புநாயகி என்ற திருநாமத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார். சதுர்புஜ நாயகியாக அருளும் இந்த அம்மனின் கருவறை முன்பாக துவாரபாலகியர் இருக்கிறார்கள்.

    வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. அங்கே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் தவிர, மூர்க்க நாயனாரும் காட்சி தருகிறார். தொடர்ந்து ஒரு தனிச் சன்னிதியில் விநாயகர் அருளுகிறார். இந்த சன்னிதியின் பின்புறத்தில் நாகராஜர், நாகராணி, ஐயப்பன், லட்சுமி குபேரர் சகித ஐஸ்வர்யேஸ்வரர் சன்னிதி, வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதி அமைந்துள்ளன. காலபைரவர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன.

    வில்வ மரத்தை தல மரமாக கொண்ட இந்த ஆலயத்தில், தினமும் காலை, மாலை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. குபேரலிங்க சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், வழிபடுபவர்களின் இல்லங்களில் பொன்னும் பொருளும் சேருவதுடன், அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி போன்ற மாத வழிபாடுகளும், மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம், அட்சய திருதியை, நவராத்திரி போன்ற வருட வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ஆவடியில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது, சுந்தரசோழபுரம். பூவிருந்தவல்லியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், ஆவடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

    Next Story
    ×