search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நம் நல்வாழ்வை விரும்புகிற கடவுள்
    X

    நம் நல்வாழ்வை விரும்புகிற கடவுள்

    • நீண்ட நெடிய நல்வாழ்வு வாழ்வதையே கடவுளும் விரும்புகிறார்.
    • ஆரோக்கியம் நிறைந்த வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகின்றோம்.

    `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது நம் முன்னோர்களின் பொன்மொழி. ஆனந்தமும், அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகின்றோம். அப்படிப்பட்ட இனிமையான, லட்சிய வாழ்வு தான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் கூட. அதற்காகவே நாளும் பல்வேறு புதிய புதிய முயற்சிகளையும் செய்து வருகின்றோம். நாம் நோய்நொடியற்ற, ஆசீர்வாதமான, நீண்ட நெடிய நல்வாழ்வு வாழ்வதையே கடவுளும் விரும்புகிறார்.

    இறைமகன் ஆண்டவர் இயேசு தம் ஊழியத் திட்டத்தின்படியே உடல் நலமற்றிருந்தோர் மீது பரிவு கொண்டு அவர்களை குணமாக்கினார். ஆண்டவர் இயேசு தொழுநோயாளி மீது காண்பித்த பரிவிரக்கத்தை தூய மாற்கு நற்செய்தி நூலில் (1:40-45) காணலாம்.

    தொழுநோயாளி ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம் வந்து, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். ஆண்டவர் இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக' என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்கிட அவர் நலமடைந்தார்.

    யூதர்கள் பார்வையில் தொழுநோய் என்பது மிகக் கொடிய நோயாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு; முதலாவது, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை 'கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்' என்று கருதினர்.

    "கடவுளின் தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேசியதால், சினம் கொண்ட கடவுள் மிரியாமை வெண்மையான தொழுநோயால் தண்டித்தார்". (எண்.11:10).

    "எலிசா இறைவாக்கினரின் பணியாளனாகிய கேகசி, சிரியா மன்னனின் படைத்தலைவன் நாமானிடமிருந்து ஏமாற்றிப்பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொண்ட போது கடவுள் வெண்மையான தொழுநோயால் தண்டித்தார்". (2 அர.5:27)

    "அரசன் உசியா ஆண்டவருக்குக் கீழ்படியாமல், தூபபீடத்தின் மேல் தானே தூபம் காட்டி, குருக்கள் மேல் கோபங்கொள்ளவே கடவுள் உசியாவை தொழுநோயால் தண்டித்தார்". (2 குறி.26:19)

    எனவே கடவுளின் சாபத்தின், தண்டனையின் வெளிப்பாடே தொழுநோய் என நம்பினர். இரண்டாவது, நியாயப்பிரமாணத்தின்படி இவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்களாயிருந்தனர்.

    "ஒரு தொழுநோயாளியை 'அவர் தீட்டுள்ளவர்' என்று குரு அறிவிப்பார். அவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, 'தீட்டு, தீட்டு' எனக் குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர் ஆனபடியினால் அவர் பாளையத்துக்கு வெளியே தனியாக குடியிருக்க வேண்டும்". (லேவி.13:44,45)

    மூன்றாவதாக, 'தொழுநோயைக் குணப்படுத்துவது மரித்தவனை எழுப்புவதற்கு ஒப்பாகும்' என யூத ரபிமார் களால் கருதப்பட்டது.

    தொழுநோயின் வேதனையோடு வாழ்ந்து வருகின்ற இந்த மனிதர் சமூகத்தின் சட்டங்களைப் பொருட்படுத்தாமல், பின்விளைவுகள் பற்றியோ, பிறர் என்ன சொல்வார்கள் என்பது பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் ஆண்டவர் இயேசுவிடம் வந்து சுகம்பெற வேண்டுமென்று மன்றாடுகிறார். 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று தொழுநோயாளி தன் மாபெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

    'முழந்தாள்படியிடுதல்' என்பதன் மூலம் மிகுந்த தாழ்மை யான ஒப்படைப்பைக் காண்பிக்கின்றார். இயல்பாகவே மக்கள் மீது அளவற்ற மனதுருக்கம் கொண்ட ஆண்டவர் இயேசு, தன்னால் முடியுமென்ற ஆழ்ந்த பற்று, உறுதியுடன் வந்த இந்த தொழுநோயாளியின் மீது தன் பேரிரக்கத்தை வெளிப் படுத்துகிறார்.

    "இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண் டவர்" (யோபு. 36:5).

    தொடக்கூடாதென்று யூத சமூகம் ஒதுக்கி வைத்திருந்த தொழு நோயாளி மீது பரிவு கொண்டு தொட்டு சுகமளிக்கின்றார். அவரை ஏற்றுக்கொள்வதோடு, அவரும் சமூகத்தில் மிக முக்கியமானவர் என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்துகிறார்.

    நீங்களும் கொடிய வியாதியினாலோ, நெடுநாள் பலவீனத் தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தின் நிமித்தமாகவோ இந்த சமூகத்தால், உறவினர்களால், நண்பர்களால், சொந்த குடும்பத்தினரால் கூட ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வரலாம். ஆண்டவர் இயேசு கண்ணீர் நிறைந்த உங்கள் வேண்டுதலை கனிவுடன் கேட்டு, பரிவுடன் இரங்கி உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவராக இருக்கிறார்.

    ஏனெனில், 'ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை' (திபா.69:33).

    எப்போதும் நம்மை சோதித்துக்கொண்டோ, கொடுந்துன்பத்தினால் நாம் வடிக்கின்ற கண்ணீரைப் பார்த்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கிறவர் அல்ல நம் கடவுள். அவர் நம் கண்ணீரைக் காண்கிற கடவுள். நாம் மகிழ்ச்சியான, மன நிறைவும் ஆரோக்கியமும் நிறைந்த நல்வாழ்வு வாழ்வதையே ஆண்டவரும் விரும்புகிறார். அப்படிப்பட்ட ஆசி நிறைந்த நிறைவாழ்வை ஆண்டவரால் நமக்கும் தரமுடியுமென்று உறுதியாக நம்பு வோம். அவர் திருப்பாதத்தில் நம்மை நாம் முழுமையாய், தாழ்மையாய் ஒப்படைப்போம்.

    வில்லியம் ஹோரி, 'கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்; கடவுளுக்காக பெரிய காரியங்களை செய்யுங்கள்' என்கிறார்.

    Next Story
    ×