search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    எரிமலைக்குள் ஒரு தேவாலயம்
    X

    எரிமலைக்குள் ஒரு தேவாலயம்

    • எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு சிறப்பு
    • எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள்.

    பிரான்சின் `எகில்ல' என்னும் இடத்தில் அமைந்துள்ள தேவாலயம் தனித்துவமிக்கது. அது எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். கி.பி 969-ம் ஆண்டு செயலிழந்த நிலையில் இருந்த எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள். இதன் உயரம் 85 மீட்டர்கள் (279 அடி). எரிமலையின் மேற்பரப்பு 57 மீட்டர் (187 அடி) விட்டம் கொண்டது.

    இந்த தேவாலயத்திற்கு பாறை வழியாகத்தான் சென்றடைய வேண்டும். அதற்காக 268 படிக்கட்டுகள் பாறை மீது பிரத்யேகமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டுமானத்தை பிஷப் கோடெஸ்கால்க் தொடங்கி வைத்தார். இவர் கி.பி 951-ம் ஆண்டு புனித யாத்திரை முடித்து திரும்பியதை கொண்டாடுவதற்காக தேவாலயத்தை கட்டினார். பாறை படிகளில் ஏறும்போது களைப்படைந்தால், இடை இடையே ஓய்வெடுப்பதற்கான இடங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    தேவாலயத்தின் நுழைவாயிலில் கிறிஸ்து, கன்னி மேரி, செயின்ட் மைக்கேல், செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் பீட்டர் ஆகியோரின் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறம் பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டின்போது, இந்த தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, தேவாலயம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது. 1275-ம் ஆண்டு மணி கோபுரம் இடிந்து விழுந்தது. அது 19-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. ஓவியங்கள் மீது மீண்டும் வர்ணம் பூசப்பட்டன.

    1955-ம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தேவாலயத்தை ஆராய்ச்சி செய்தபோது பலி பீடத்தில் புனிதமான பொருட்களின் புதையல் ஒன்றை கண்டுபிடித்தனர். உலோக சிலுவை, 11-ம் நூற்றாண்டின் மர சிலுவை உட்பட புனித கலைப்பொருட்களின் தொகுப்புகள் அதில் இருந்தன. அவை இப்போது சுவரில் இரும்பு கூண்டுக்கு பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை மீது அழகுற காட்சி அளிக்கும் இந்த தேவாலயம் உலகம் முழுவதும் இருந்து பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×