
முன்னோர்களின் இறந்த தினம் தெரியாதவர்கள் கூட அமாவாசை நாளில் ராமேசுவரம் வந்து தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நமக்கு நன்மை தருவார்கள் என பலரும் நம்புகின்றனர். இதனால் மற்ற நாட்களை விட அமாவாசை நாட்களில் ராமசுவரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இன்று மாசி அமாவாசை நாள் என்பதால் ராமேசுவரத்தில் காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மீண்டும் அக்னிதீர்த்தக் கடலில் குளித்த மக்கள், அதன்பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றனர்.
அங்குள்ள தீர்த்தக் கிணறுகளில் நீராடிய பின்னர் பக்தர்கள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதன் காரணமாக இன்று ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.