search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
    X
    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா தொடங்கியது

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பி்ன்னர் காலை 7 மணிக்கு கோபால விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இரவு 8 மணிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து 10 மணிக்கு பூசாரிகள் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தர்ப்பை வைத்து கட்டி சிம்ம வாகன கொடி ஏற்றினர். இதையடுத்து சிறப்பு யாகம் செய்து காப்புக்கட்டினர். இரவு 10.30 மணிக்கு பம்பை, மேளதாளம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக அக்னிக்குளத்திற்கு சென்றனர். அங்கு பலவிதமான மலர்களை கொண்டு சக்தி கரகம் செய்து 9 நாட்கள் விரதமிருந்த துரை பூசாரி தலையில் வைத்துக்கட்டினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஆடியபடி கோவிலை சென்றடைந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுத்தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மாசிப்பெருவிழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி தீமிதி திருவிழாவும், 7-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இது தவிர தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×