search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கருடன்
    X
    கருடன்

    கருட பகவானைப் பற்றிய அரிய தகவல்கள்

    கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
    திருமாலின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர், கருட பகவான். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் பெருமாளுக்கு எதிரே கருடனின் சிலை இருப்பதைக் காணலாம். அந்த கருட பகவானைப் பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    * கருட பகவான், திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே ‘கருட சேவை’ எனப்படும். அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

    * ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

    * கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

    * கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

    * கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    * பெருமாளை தங்கள் தமிழால் புகழ்ந்து பாடிய 12 ஆழ்வார்களும், நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருட பகவானைப் பற்றி சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள்.

    * சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

    * எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்கிறார்கள்.

    * கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

    * நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு ‘கருடோத்காரம்’ அல்லது ‘கருடமணி’ என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறியதாக புராணக்கதை ஒன்று உள்ளது. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

    * திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலுள்ள கருட பகவான் 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களை சூடி காட்சி தருகிறார்.

    * ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்கமன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதற்கு கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததே காரணம்.
    Next Story
    ×