என் மலர்

  வழிபாடு

  திருப்பதி பெருமாள்
  X
  திருப்பதி பெருமாள்

  திருப்பதி ஏழுமலையானின் தினசரி சேவைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு, தன் அருளை வாரி வழங்கும் அந்த வேங்கடமுடையானுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகள்’ பற்றி இங்கே பார்ப்போம்.
  வாழ்வில் நல்லவிதமான திருப்பங்கள் ஏற்பட, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்ப வேண்டும் என்பார்கள். நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு, தன் அருளை வாரி வழங்கும் அந்த வேங்கடமுடையானுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகள்’ பற்றி இங்கே பார்ப்போம்.

  சுப்ரபாத சேவை

  தினமும் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணியளவில் துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறும். சுப்ரபாதத்தை பாடியவாறு அர்ச் சகர் பெருமாளை துயிலெழுப்பும் சமயத்தில், தங்கவாசல் முன்பு அன்னமய்யா பரம்பரையை சேர்ந்தவர்கள் ‘பூபாள ராகத்தில்’ அன்னமய்யாவின் திருப்பள்ளி எழுச்சி கீர்த்தனையை இசைப்பர். அர்ச்சகரால் ‘நவநீதஆரத்தி’ காட்டப்படும்போது அடியவர்கள் தரிசிக்க தங்கவாசல் திறக்கப்படும்.

  கொலுவு (தர்பார்)

  சொர்ண சிம்மாசனத்தில் கொலுவிருக்கும் ‘கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி’க்கு அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் அன்றைய உற்சவங்கள் பற்றி சொல்லப்படும். கணக்காளர் மூலம் வருவாய், காணிக்கைகள் போன்ற தகவல்கள் சீனிவாசனுக்கு வணக்கத்துடன் விபரமாக கூறப்படும்.

  சகஸ்ரநாம அர்ச்சனை

  பிரம்ம முகூர்த்த சமயத்தில், உலக நன்மைக்காக ‘சகஸ்ர நாம அர்ச்சனை’ எம்பெருமாளின் திருப்பாதங்களில் துளசி சமர்ப்பித்து செய்யப்படும். அதோடு, அவரது மார்பில் வசிக்கும் மகாலட்சுமிக்கும் அர்ச்சனையுடன் நட்சத்திர ஆரத்தி காட்டப்படும்.

  ஆர்ஜித வசந்தோற்சவம்

  ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் வசந்தோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது ‘ஆர்ஜித வசந்தோற்சவம்’ ஆகும்.

  தோமாலை சேவை

  அலங்கார பிரியராக விளங்கும் பெருமாளை புஷ்ப அலங்காரத்தில் தரிசிப்பது ‘தோமாலை சேவை’ எனப்படும். ஜீயர் சுவாமிகள் பக்தியுடன் அளிக்கும் பூமாலைகளை பெற்று அர்ச்சகர் முதலில் ‘போக ஸ்ரீனிவாசமூர்த்தி’யை அலங்கரிப்பார். பின்னர், மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்படும். ‘திருவடி மாலை’, ‘சிகாமணி மாலை’, ‘சாளக்கிராம மாலை’, ‘கண்டசரி’ என்ற பெரிய மாலை என்று பல்வேறு மாலைகளால் திருவேங்கடவனுக்கு அலங்காரம் செய்யப்படும். எம்பெருமாள் திருமார்பில் இருக்கும் ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கும் மலர்மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தூபம், தீபம், நட்சத்திர ஆரத்தி ஆகியவற்றை தொடர்ந்து கற்பூர ஆரத்தி விமரிசையாக செய்யப்படும்.

  நித்திய கல்யாணோற்சவம்

  ‘அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடனும், ‘நித்திய கல்யாண மூர்த்தி’யான மலையப்ப சுவாமிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், தினமும் நண்பகல் 12 முதல் 1 மணி வரை நித்திய கல்யாண உற்சவம் நடத்தப்படும்.

  ஏகாந்த சேவை

  சயன மண்டபத்தில் வெள்ளி சங்கிலியால், தங்க கட்டிலை இணைத்து, அதில் பட்டு மெத்தை, தலையணை அமைப்பார்கள். சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து போக ஸ்ரீநிவாச மூர்த்தியை அதில் பள்ளி கொள்ளுமாறு செய்வார்கள். அச்சமயத்தில் அன்னமய்யாவின் தாலாட்டு பாடல் பாடப்படும்.

  ஆர்ஜித பிரம்மோற்சவம்

  திருவேங்கடவன் தமது உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட மற்றும் அனுமன் வாகனங்களில் எழுந்தருளி கற்பூர தீபாராதனை ஏற்பது ‘ஆர்ஜித பிரம்மோற்சவம்’ ஆகும்.

  சகஸ்ர தீப அலங்கார சேவை

  திருமலை வேங்கடவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொலு மண்டபத்தில் ‘சகஸ்ர’ (ஆயிரம்) தீபங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசம் உடையவராக தரிசனம் தருவது ‘சகஸ்ர தீப அலங்கார சேவை’ எனப்படும்.

  டோலோத்ஸவம்

  கல்யாண உற்சவம் நிறைவுற்ற பிறகு, கண்ணாடி மண்டபத்தில் உள்ள ‘டோல்’ எனப்படும் ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி கற்பூர தீபாராதனை ஏற்கும் நிகழ்வு ‘டோலோத்ஸவம்’ எனப்படும்.
  Next Story
  ×