
மாசித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய பின்னர், குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
12 நாட்கள் நடைபெற கூடிய இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை மறுநாள் 7-ம் திருநாளன்று காலையில் வெற்றிவேர் சப்பரபவனியும், மதியம் சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளன்று பச்சை சாத்தியும், 10-ம் திருநாளான 16-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 17-ந்தேதி தெப்பத்திருவிழா, 18-ந்தேதி யுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.