search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம்.

    தைப்பூச திருவிழா நிறைவாக பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

    பழனியில் தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை கோவில் பணியாளர்கள் தூக்கி தொட்டியில் 3 முறை வலம் வந்தனர்.
    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை வலம் வருவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் 'அரோகரா' கோஷம் அதிர வைக்கும்.

    இந்த ஆண்டு தெப்ப உற்சவம், பக்தர்கள் இன்றி பெரியநாயகி அம்மன் கோவிலில் எளிமையாக நடந்தது. அதாவது கோவில் பிரகாரத்தில் உள்ள தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை பணியாளர்கள் தூக்கி வலம் வந்தனர். முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை, 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை கோவில் பணியாளர்கள் தூக்கி தொட்டியில் 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், பொறியாளர்கள் குமார், பாலாஜி, கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.
    Next Story
    ×