என் மலர்

  வழிபாடு

  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
  X
  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  17 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
  தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றி 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கிழக்கு புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன்.

  தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை-நாகை சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

  இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. எனவே கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

  மேலும் ஆகம விதிப்படி இந்த கோவிலில் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

  அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும்.

  ஆடி மாதம் முத்துப்பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்கு பூஜைகள் ஆகியவையும், ஆவணி மாதம் ஆண்டு திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும், நவராத்திரி விழாவும், மார்கழியில் லட்சத்திருவிளக்கு விழாவும் வெகு சிறப்பாக நடைபெறும்.

  இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தஞ்சை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

  இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் 17 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இன்னும் இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை.

  தமிழக அரசு பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×