search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) அம்மன் மரசிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகிறார்.
    சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி, உற்சவர் அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினர். அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மரகேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இரண்டாம் நாளான இன்று(திங்கட்கிழமை) அம்மன் மரசிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகிறார். திருவிழாவின் 8-ம் நாள் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9-ம் நாள் திருவிழாவன்று காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் அமைக்கப்படவுள்ள சிறிய அளவிலான தெப்பத்தில் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து அம்மன் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×