search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இரவிலும் இருமுடி கட்டுடன் காத்திருக்கும் பக்தர்கள்
    X
    சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இரவிலும் இருமுடி கட்டுடன் காத்திருக்கும் பக்தர்கள்

    சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கரம பூஜை: 12-ந்தேதி திருவாபரண ஊர்வலம்

    மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான மகர சங்ரம பூஜை வழிபாடு 14-ந்தேதி பிற்பகல் 2.29 மணிக்கு நடக்கிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.

    முன்னதாக அன்று அதிகாலையில் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் மேல்சாந்தி தலைமையில் திருவாபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மதியம் 1 மணிக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படும்.

    இந்த ஊர்வலம் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, காளைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக பம்பையை சென்றடையும். பின்னர் ஆபரண பெட்டிகள் 14-ந் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

    முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான மகர சங்ரம பூஜை வழிபாடு 14-ந்தேதி பிற்பகல் 2.29 மணிக்கு நடக்கிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் இந்த சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடைசூழ அனுப்பி வைக்கப்படும் சிறப்பு நெய் மூலம் சாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    மேலும், 14-ந் தேதி ஆபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் போது 18-ம் படியேறி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பிறகு இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் மீண்டும் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவாபரண ஊர்வலத்தை முன்னிட்டு ஆரன்முளா துணை கமிஷனர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×