search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்

    திருப்பதியில் ஜனவரி 11 முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 12000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் கூடுதலாக 8 ஆயிரம் டிக்கெட் என 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மீண்டும் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 5 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது.

    தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் திருப்பதி வந்து ஏமாற்றம் அடையும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் சார்பில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

    இலவச தரிசனம் பெறும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ நிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் டிசம்பர் 30-ந்தேதி வழங்கப்படுகிறது.

    கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க வரும் 26-ந்தேதி 5,500 நித்ய சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 27-ந்தேதி வாடகை அறைகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜனவரி 11 முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்து.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் ஜனவரி 10-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை 6 மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட் எண் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 33,489 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,065 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    Next Story
    ×