search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் இருந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட காட்சி.
    X
    திருப்பதி கோவிலில் இருந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட காட்சி.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பஞ்சமி தீர்த்தவாரி

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று மாலை கொடியிறக்கப்பட்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை, இரவில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் உலா வந்தார். கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

    பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏழுமலையானுக்கு கஸ்தூரி மஞ்சள், சந்தனம், பன்னீர், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து திருமஞ்சனம் நடந்தது.

    இதையடுத்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் ஏழுமலையான் கோவில் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று எடுத்துச் சென்றனர். சீர்வரிசை பொருட்கள் பத்மாவதி தாயார் கோவிலுக்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு திருமஞ்சனம் நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11.52 மணி முதல் 12 மணிக்குள் கோவில் குளத்தில் அம்மனுக்கு பஞ்சமி தீர்த்தவாரி நடந்தது. வழக்கமாக தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் எதிரொலியால் பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நடந்தது.

    நிகழ்ச்சியில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இன்று மாலை கொடியிறக்கப்பட்டு பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×