search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர்
    X
    திருச்செந்தூர்

    கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் நாளை சூரசம்ஹாரம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபாவளி, விடுமுறை தினங்களையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் 5-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருகிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை நடைபெறும் சூரசம்ஹாரம், நாளை மறுநாள் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்செந்தூர் வரும் வழியில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அன்பு நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் நாழிகிணறு பஸ் நிலையம், தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அவர் கூறும்போது, திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா முடிந்த பின்னர் வருகிற 11-ந்தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
    Next Story
    ×