
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெற்கு கோபுரம் அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு வேத மந்திரங்கள் முழங்க இரவு 7.40 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
கோவில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் ராஜாகுமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், ககாரின் ராஜ், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், காசாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் 2-வது ஆண்டாக நேற்றும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.