என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடித் திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
    X
    ஆடித் திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    ஆடித் திருக்கல்யாண திருவிழா: ராமேசுவரம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா வருகிற 1-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா வருகிற 1-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று கோவிலின் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கோவிலில் அம்மன் சன்னதி நுழைவு வாசல் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது. பின்னர் முகூர்த்தகாலுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனி குமார், மேலாளர் சீனிவாசன் மற்றும் பேஷ்கார்கள் கலைச்செல்வன், கமலநாதன், காசாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முதல் நாளான வருகிற 1-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 11-ந்தேதி ஆடி தபசு வழிபாடும், 12-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தால் இந்த ஆண்டும் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின்போது சாமி ரத வீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறாது. அவை கோவிலில் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறாது என்பதுடன் திருவிழாவின் அனைத்து நாட்கள் நிகழ்ச்சியும் கோவிலின் உள் பகுதி மூன்றாம் பிரகாரத்திலேயே வைத்து நடைபெறும்.

    மேலும் வழக்கமாக ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம்.ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டும் கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதுபோல் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி, அம்பாள் ராமர் பாதம் செல்லும் மண்டகப்படி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியும் கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது.
    Next Story
    ×