search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.(உள்படம்:சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)
    X
    கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.(உள்படம்:சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    தொடர்ந்து பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பேரிதாடனம் நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் கருடமண்டபம் சென்று, சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

    சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    வருகிற 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
    Next Story
    ×