
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதி லிங்கத் தில் தமிழகத்தில் கடைக் கோடியான ராமேசுவரம் பகுதியிலுள்ள ராமநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஜோதிலிங்கமும் ஒன்று.
இங்கு உலகமுழுவதும் இருந்து ஆண்டுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். காசிக்கு நிகராக கருதப்படும் அக்னிதீர்த்தம் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை, புரட்டாசி சிவராத்திரி தினம், மகாளய அமாவாசை நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் மற்றும் வெள்ளி தேரோட்டம் போன்ற வழிபாடுகளை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைய தொடங்கியது.இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ளித்தது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பல்வேறுகட்ட தளர்வுகளில் கோவில்களுக்கு விதித்திருந்த அனைத்து தடைகளையும் தமிழக அரசு நீக்கியது. இதன்காரணமாக கடந்த 2-ந் தேதி பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராட அனுமதியளிக்கப்பட்டனர்.
அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஆயிரக்கணக்காண பக்தர்கள் கார், வேன், அரசு பஸ் மூலம் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசையான இன்று(11-ந் தேதி) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடினர். 3-ம் பிரகரத்தில் பல மணி நேரம் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து ராமநாதசுவாமி சுவாமி, பர்வதவர்ததினி அம்பாளை தரிசித்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக காலையில் சுவாமி ராமர், லட்சுமணன், சீதை கருட வாகனத்திலும், மற்றும் ராமநாதசுவாமி, பிரியாவிடை மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடகி அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் அமைந்துள்ள மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது. இதையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாதுகாப்புபணியில் 100க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கோயிலை சுற்றி 4 ரத வீதிகள், அக்னீ தீர்த்தக் கடல் பகுதி, சன்னதி தெரு, கோயிலின் உள்பிரகாரங்கள் என அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமாரா மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர்.
பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் கல்யாணி உத்தரவின் பேரில் கணக் கீட்டாளர் சீனீவாசன், கோவில் பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ககாரின்ராஜ், பேஷ்கார் அண்ணா துரை, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் விழா பொறுப்பு அலுவலர் கலைச்செல்வம் உள்பட திருக்கோயில் அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் களை கட்டி காணப்பட்டது.