
குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட சாலைகளில் நேற்று பக்தர்கள் பாதயாத்திரையாக அணிவகுத்து வந்து கொண்டு இருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக பழனி பஸ்நிலையம், குளத்துரோடு, அடிவாரம் ரோடு, சன்னதி ரோடு, பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். சிலர் மேள, தாளங்களுடன் ஆங்காங்கே மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஆடியபடி சென்றனர்.
பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்கவும், திருட்டு நடப்பதை தடுக்கவும் சாதாரண உடையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வரும் வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. அதை அவர்கள் ஆனந்தமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
இன்று மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.
அதோடு பழனி முருகன் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தவும், பயணிகளுக்கான நிழற்குடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கியில் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.