
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக வலம் வந்து காலை 9.15 மணியளவில் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.