search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி வரையப்பட்டிருந்த நீர் கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
    X
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி வரையப்பட்டிருந்த நீர் கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

    விழாவையொட்டி 18-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    நவராத்திரி விழாவையொட்டி தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி பொற்றாமரை குளம், அம்மன், சாமி சன்னதி, பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



    கோவிலில் வரையப்பட்டிருந்த நீர்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவையொட்டி 18-ந் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நேரம், திரை போடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணி முதல் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5 மணியில் இருந்து 7 மணி வரை சாமி தரிசனம். பின்னர் 7 மணியில் இருந்து 8 மணி வரை திரை போட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு 8 மணியில் இருந்து 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து 10 மணியில் இருந்து 10.45 மணி வரை திரை போடப்படும். பின்பு 10.45 மணியில் இருந்து 12.45 வரை சாமியை தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.

    பின்பு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். அந்த நேரங்களில் கொலுமண்டபத்தில் உள்ள உற்சவர் மீனாட்சியை தரிசனம் செய்யலாம். பின்பு இரவு 7.30 மணியில் இருந்து 10 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியார் செய்து உள்ளனர். 
    Next Story
    ×