என் மலர்
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை நடக்கிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தபடி உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 41-வது தினத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (செவ்வாய்கிழமை) மண்டல பூஜை நடக்கிறது. திருவிதாங்கூரை ஆண்ட சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு அணிவிக்க 420 பவுன் எடையுள்ள தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
அதன் பிறகு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்படும். அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த தங்க அங்கி கடந்த 22-ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நேற்று பத்தனம்திட்டை மாவட்டம் பெரிநாடு வந்து சேர்ந்தது. இன்று (திங்கட்கிழமை) மதியம் தங்க அங்கி ஊர்வலம் பம்பையை வந்து அடைகிறது. பம்பை கணபதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள தாளம் முழங்க சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் 18-ம் படிக்கு கீழ்பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். அந்த தங்க அங்கி 18-ம் படி வழியாக கொண்டு சென்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பகல் 11.04 மணி முதல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையையொட்டி, சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கமாண்டோ, தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினர் தவிர, பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்னர்.
இந்திய விமான படை பிரிவின் சிறப்பு ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. பம்பை ,சன்னிதானம் பகுதிகளில் முழு நேரமும் வட்டமிட்ட படி கண்காணிப்பில் ஈடுபடும் இந்த ஹெலி காப்டரில் பொறுத்தப்பட்டுள்ள நவீன கேமரா மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை அவ்வப்போது உயர் அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.
Next Story






