search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டின் மகிமை
    X

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டின் மகிமை

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    “ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டர்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே.சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உல கமே சிவசக்தி மயமாக உள்ளது.
    எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமிபட்டர். இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

    அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும். அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான ‘வாராகி நவராத்திரி’ இம்மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும் படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

    அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
    அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.

    அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.
    மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும்.

    அதற்கு பெண்களுக்கு ஆடி மாத வழிபாடு மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும்.சக்தியை வழிபடுவோம்..... சகல நன்மைகளையும் பெறுவோம்....
    Next Story
    ×